ராணுவ கிடங்குகளை இனி தகர்க்க முடியாது; புதிய கட்டமைப்பை கண்டுபிடித்தது எஸ்.இ.ஆர்.சி.,
ராணுவ கிடங்குகளை இனி தகர்க்க முடியாது; புதிய கட்டமைப்பை கண்டுபிடித்தது எஸ்.இ.ஆர்.சி.,
ADDED : டிச 24, 2024 01:38 AM

சென்னை: ராணுவ தளவாடங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகள், குண்டுவெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதத்தின் போது, எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக, வளையும் தன்மையுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தில் 'கான்கிரீட்' கட்டமைப்பை, சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் மத்திய கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளது.
மத்திய அரசின், சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கீழ், எஸ்.இ.ஆர்.சி., செயல்படுகிறது.
இது, கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து வருகிறது. கட்டுமானப் பணிகளில், 'கான்கிரீட்' அமைப்பதற்கு, சிமென்ட், மணல், ஜல்லி கற்கள், இரும்பு கம்பி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, கான்கிரீட்டில் வளையும் தன்மை, 3.50 டிகிரி வரை தாங்கும் வகையில் அமைக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தின் போது நொடிப்பொழுதிலும், குண்டு வெடிப்பின் போது அதை விட வெகு விரைவாகவும் கட்டடங்கள் சேதமடைகின்றன. இதனால், கான்கிரீட் தளம், சுவர் இடிந்து விழுவதால் உயிர், உடைமைகளுக்கு சேதம் ஏற்படுகிறது.
குறிப்பாக, வெடிபொருட்கள் வைத்திருக்கும் ராணுவக் கிடங்குகள், சுரங்க பாதைகள் போன்றவற்றுக்கு, அதிக பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க தற்போது, 10 டிகிரி வரை வளையும் தன்மையுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தில் கான்கிரீட் கட்டமைப்பை, எஸ்.இ.ஆர்.சி., கண்டுபிடித்து உள்ளது.
இதற்கு, 'லேஸ்டு ஸ்டீல் - கான்கிரீட் காம்போசிட் பேனல்ஸ்' என, பெயரிடப்பட்டு உள்ளது. இதற்கும், கான்கிரீட் உருவாக்க பயன்படுத்தப்படும் அதே மூலப்பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தொழில்நுட்பத்தில், பழைய முறையில் இருப்பது போல, 'வெல்டிங்' பயன்படுத்தப்படாது. 3 மீட்டர் உயரத்தில் இரு பக்கமும் இரும்பு தகடுகள் இடையே, கான்கிரீட் உடைய இந்த அமைப்பை இணைக்க, 'ஷு லேஸ்' போல் கம்பி வாயிலாக இணைக்கப்படும்.
இந்த கட்டமைப்பை தேவைக்கு ஏற்ப உருவாக்கி, ஒன்றுடன் ஒன்று இணைத்து, கான்கிரீட் தளங்கள், சுவர்கள், அடித்தளம் என, முழு கட்டுமானத்தை ஏற்படுத்தி கொள்ளலாம். இது, 10 டிகிரி வரை வளையும் தன்மை உடையது.
இதை பயன்படுத்தி, ராணுவக் கிடங்குகள் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் கட்டும் போது, குண்டுவெடிப்பு, நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கான்கிரீட் உடையாது. அதேசமயம், பழைய முறையில் கான்கிரீட் இரண்டாக உடைந்து விடும்.
காப்புரிமை பெற்றுள்ளோம்
சென்னை தரமணியில் செயல்படும், சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., இயக்குனர் என்.ஆனந்தவள்ளி கூறியதாவது:
இந்த கான்கிரீட் புதிய தொழில்நுட்பம், விரைவாக அதிக அழுத்தம் எதிர்கொள்ளும் கட்டமைப்புகளுக்கு சிறப்பாக பொருந்தும். இந்த தொழில்நுட்பத்துக்கு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம், டில்லியில் உள்ள, 'மாடர்ன் ப்ரீ பேப் சிஸ்டம்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான கட்டுமான பொருட்களை கொண்டு, புதிய சிந்தனையுடன் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தில் தரக்கட்டுப்பாடு அதிகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.