ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு; வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி பெருமிதம்!
ராணுவ தளவாட ஏற்றுமதி 30 மடங்கு அதிகரிப்பு; வெலிங்டன் விழாவில் ஜனாதிபதி பெருமிதம்!
UPDATED : நவ 28, 2024 02:05 PM
ADDED : நவ 28, 2024 01:58 PM

ஊட்டி: ''நமது ராணுவ தளவாட ஏற்றுமதி, 10 ஆண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும், இப்போது 30 மடங்கு அதிகரித்துள்ளது,'' என்று வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அவர் வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: இந்த கல்லுாரியில், 26 நாடுகளை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். வரும் காலங்களில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
முன்னுரிமை
நமது எல்லைகளை பாதுகாக்க அரும்பணியாற்றும் ராணுவத்தினரின் சேவையை எண்ணி, நாடு பெருமை கொள்கிறது. தேசத்துக்கு முன்னுரிமை அளித்து அர்ப்பணிப்பு உணர்வுடன் அவர்கள் பணியாற்றுகின்றனர். தேசம் காக்கும் பணிக்கு அவர்களை அனுப்பி வைத்த வீரர்களின் குடும்பத்தாருடைய நாட்டுப்பற்றையும் நான் பாராட்டுகிறேன். இன்று இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகிறது.
முன்னேற்றம்
உலகமே அதை அங்கீகரிக்கிறது. ஆத்மநிர்பர் பாரத் என்ற அடிப்படையில், இந்தியா எதிர்கால சவால்களை சமாளிக்கும் நோக்கில், பல்வேறு தளவாடங்களை சொந்தமாக தயாரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், நமது பாதுகாப்பு தொழில் துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை தயாரித்து வழங்குவதில், டி.ஆர்.டி.ஓ., புதிய உச்சங்களை தொட்டுள்ளது.
தற்போது இந்தியா, 100 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுக்கு முன் இருந்ததை காட்டிலும் 30 மடங்கு ராணுவ தளவாட ஏற்றுமதி இப்போது அதிகரித்துள்ளது. வேகமாக மாறி வரும் புவி அரசியலில், எந்த சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஆராய்ச்சிகள்
புவி அரசியல் சூழல் மாற்றம், பாதுகாப்பு தேவைகளையும் மாற்றி வருகிறது. தேசிய, சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும். இணையத்தில் நடக்கும் போர், பயங்கரவாதம், காலநிலை மாற்றம் குறித்த சவால்களை சமாளிப்பதற்கும் நாம் தயாராக வேண்டும். அந்த வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.
மரியாதை!
முன்னதாக, வெலிங்டனில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் உள்ள போர் நினைவுத்தூணில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, அவரை ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டண்ட் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்ட் கமாண்டண்ட் சுனில் குமார் யாதவ் ஆகியோர் வரவேற்றனர். அவர் ராணுவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
நீலகிரி பழங்குடியின மக்களை, ராஜ்பவனில் நாளை (நவ.,29) சந்திக்க உள்ளார். 30ம் தேதி காலை ஊட்டியில் இருந்து கோவை செல்லும் ஜனாதிபதி, அங்கிருந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.