உற்பத்தி செலவு அடிப்படையில் கொள்முதல் விலை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
உற்பத்தி செலவு அடிப்படையில் கொள்முதல் விலை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : ஏப் 06, 2025 01:25 AM

நாமக்கல்:பால் உற்பத்தி செலவை அடிப்படையாக வைத்து கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தால், தினமும், 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் இலக்கை அடையலாம்' என, தமிழக பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசின், பால்வளத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவித்த திட்டங்களில், பால் உற்பத்தி அளவை அதிகரிக்கவோ, கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தவோ, எந்த நடவடிக்கையும் இல்லை.
தமிழகம் முழுதும் கலப்பின பசுக்கள் வளர்க்கப்பட்டு, பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதன் வம்சாவழி திறனில், பால் உற்பத்தியை ஒவ்வொரு கறவையிடம் இருந்து பெற, அடர் கலப்புத்தீவனம் வழங்கினால் மட்டுமே சாத்தியம்.
மேலும், பாலின் கொழுப்புச்சத்து, இதர திடப்பொருள் உயர்வையும், கலப்பு தீவனமே நிர்ணயம் செய்கிறது.
ஆனால், கலப்பு தீவனம் குறித்து எந்த அறிவிப்பும் மானிய கோரிக்கையில் இல்லை. தமிழகத்தில், சரியான கால்நடை கணக்கெடுப்பு விபரம் இருப்பதாக தெரியவில்லை.
எருமைப்பால், பசும்பால் உற்பத்தி செலவு, இதுவரை கண்டறியப்படவில்லை.
தமிழக பால்வளத்துறை அமைச்சர், 'நாளொன்றுக்கு, 50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும்' என்று அறிவித்துள்ளார்.
'பால் உற்பத்தி செலவு அடிப்படையில், கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான், தினமும், 50 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யும் இலக்கை அடைந்து, தமிழகத்தில் பால் உற்பத்தியை, குஜராத் மாநிலத்தை போல மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
நம்பிக்கை குறைந்து விட்டது
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது அலி கூறியதாவது:
பசும்பால் லிட்டர், 35ல் இருந்து, 45 ரூபாய், எருமை பால், 41ல் இருந்து, 51 ரூபாயாக உயர்த்த, பல ஆண்டுகளாக நாங்கள் கோரினோம். அதுபற்றிய அறிவிப்பு இல்லை. மகளிர் உரிமை தொகையை, நேரடியாக வழங்குவது போல, பாலுக்கான ஊக்கத்தொகையை, நேரடியாக உற்பத்தியாளர்களுக்கு தருவதாகவும், சொசைட்டிக்கு இனி வழங்க இயலாது என்றும், அரசு கூறுகிறது.
தற்போதே, 3, 4 மாதமாக கறவையாளர்களுக்கான ஊக்கத்தொகை, பல கோடி ரூபாய் தரவில்லை. ஆவின் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது. அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கத்தை இணைத்து, விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.