நெல்லையில் தொடருது கனிம கொள்ளை; கல்குவாரியில் பாறை சரிந்து ஒருவர் பலி
நெல்லையில் தொடருது கனிம கொள்ளை; கல்குவாரியில் பாறை சரிந்து ஒருவர் பலி
ADDED : டிச 19, 2024 02:32 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே குவாரியில் பாறை சரிந்ததில் லாரி டிரைவர் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியானார். இன்னொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
கூடங்குளம் அருகே இருக்கந்துறை பகுதியில் புத்தேரி கிராமத்தில் குவாரியில் நேற்று லாரிகளில் கற்களை அள்ளும் பணி நடந்தது. மதியம் 1:00 மணிக்கு வெடி வைத்து பாறைகளை தகர்த்தனர். 3:40 மணிக்கு கற்களை இயந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றும் பணி நடந்தது. அப்போது திடீரென பாறை ஒட்டுமொத்தமாக சரிந்தது. பாறைச் சரிவு லாரி மற்றும் இயந்திரங்கள் மீது விழுந்தன. இதில் லாரி முழுதுமாக பாறைக்குள் சிக்கியது.
லாரி டிரைவர் நாகர்கோவில் அருள்குமார் 40. சிக்கி
பலியானார். இயந்திரத்திற்குள் டிரைவர் ராஜேஷ் 32, சிக்கிக்கொண்டார். பழவூர் போலீசார், திருநெல்வேலி தீயணைப்பு படையினர் காயங்களுடன் ராஜேஷையும், அருள்குமார் உடலையும் மீட்டனர்.
விதிமீறல் குவாரிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 54 கல்குவாரிகள் உள்ளன. 2022 மே 14 ல் அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு தொழிலாளர்கள் பலியாயினர். பெரும்பாலான குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிகமாக கனிமங்களை தோண்டி எடுக்கின்றனர். சுரங்கத் துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. விதிமீறல் தொடர்வதால் விபத்துகளும் உயிர்ப்பலிகளும் தொடர்கின்றன.
அண்மையில் காவல்கிணறு பகுதியில் தனியார் குவாரி அதன் உரிமம் பெற்ற காலம் முடிந்த பிறகு கற்களை அள்ளினர். கலெக்டர் கார்த்திகேயன் குவாரி அனுமதியை ரத்து செய்தார். இருப்பினும் குவாரி செயல்படுவதவாக அறப்போர் இயக்கத்தினர் வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். அதன்பின் குவாரி மூடப்பட்டது.
குவாரிகளில் எடுக்கப்பட்ட கனிம வளம் குறித்து குறித்து ட்ரோன் கேமராக்கள் மூலம் அளவீடு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் அளவீட்டுப் பணிகள் நடக்கவில்லை.
சமூக அலுவலர் பெர்டின் ராயன் இது குறித்து கவர்னர் ரவிக்கு புகார் அனுப்பினார். அவரது புகாரின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் 2024 ஜூன் 24ல் கல்குவாரிகள் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய தகலெக்டருக்கு உத்தரவிட்டார். இருப்பினும் எந்த ஆய்வும் நடக்கவில்லை. பெரும்பாலான குவாரிகள் விதி மீறல்களுடன் தற்போது தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

