மின் பொறியாளர்கள் பணியில் குறைபாடு திருத்திக்கொள்ள அமைச்சர் அறிவுரை
மின் பொறியாளர்கள் பணியில் குறைபாடு திருத்திக்கொள்ள அமைச்சர் அறிவுரை
ADDED : டிச 20, 2024 12:44 AM

சென்னை:''பொதுப்பணித்துறை மின் பொறியாளர்கள் பணிகளில், சில நேரங்களில் குறைபாடு உள்ளது. அதை திருத்திக் கொண்டு, தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்,'' என, பொதுப்பணி துறை அமைச்சர் வேலு அறிவுறுத்தினார்.
பொதுப்பணி துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மின் பொறியாளர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், அமைச்சர்வேலு பேசியதாவது:
பொதுப்பணி துறை வாயிலாக கட்டப்படும் புதிய வானுயர்ந்த கட்டடங்கள் ஒளிர்வதும், மிளிர்வதும், துறையின் மின் பிரிவின் பங்களிப்பில் தான் உள்ளது. மின் பிரிவு துவங்கப்பட்ட போது மின் விளக்குகள், மின் விசிறிகள் மட்டுமே பராமரிக்கப்பட்டன.
தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சி காரணமாக லிப்ட், ஜெனரேட்டர், 'சிசிடிவி' மற்றும் உயர் கோபுர மின் விளக்குகள் என, பணிகள் விரிவடைந்துள்ளன.
துறையில் மின் பணிகளை மேற்கொள்வதற்கு, 1,000 மின் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். முன்னர், கட்டுமானம் மற்றும் மின் பணிகளுக்கு ஒரே ஒப்பந்தம் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
அந்த அரசாணையை ரத்து செய்து, சிறிய மின் ஒப்பந்ததாரர்கள் பயன் பெறும் வகையில், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள பணிகளுக்கு தனித்தனியாக ஒப்பந்தம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பழைய பழுதடைந்த மின்துாக்கிகளை மாற்றி, புதிய மின்துாக்கிகள் அமைக்க வேண்டும்.
அவற்றை பராமரிப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும். மின் பொறியாளர்களின் பணியில் சில சமயங்களில் குறைபாடு ஏற்படுகிறது.
அதனால், அரசு மருத்துவமனைகளில் மின் தடை ஏற்பட்டதும் உண்டு. தொழில்நுட்பம் பல வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
மின் பொறியாளர்கள் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு, ஆற்றலை வளர்த்து கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பொதுப்பணி துறை செயலர் மங்கத்ராம் சர்மா, முதன்மை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, சென்னை மண்டல தலைமை பொறியாளர் மணிவண்ணன், இணை தலைமை பொறியாளர் தில்லைக்கரசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.