தமிழில் பேசி தமிழில் திட்டுகிறார்! ஆனா இப்படி பண்ணிட்டாரே சீமான்! அமைச்சர் வேதனை
தமிழில் பேசி தமிழில் திட்டுகிறார்! ஆனா இப்படி பண்ணிட்டாரே சீமான்! அமைச்சர் வேதனை
UPDATED : அக் 20, 2024 07:22 PM
ADDED : அக் 20, 2024 07:18 PM

திருச்சி: தமிழில் தான் பேசுகிறார், அதே தமிழில் தான் எங்களை திட்டுகிறார். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் பேசியது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.
ஈரோட்டில் கண்காட்சி ஒன்றை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நீக்கப்படும். தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்று சொல்ல நாங்கள் தயார். திராவிடம் என்றால் என்ன என்று சொல்ல யாராவது தயாராக உள்ளார்களா? என்று பேசினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவேன் என்று சீமான் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாத, பிரதிவாதங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந் நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் மகேஸிடம் சீமானின் பேட்டி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;
அவர் எதை வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்று தெரிய வில்லை. நம்முடைய அரசியல் என்று வரும்போது, குறிப்பாக தமிழ்நாடு அரசு என்று வரும்போது அரசியலே கல்வியில் தான் ஆரம்பிக்கிறது.
அனைவருக்கும் கல்வி என்று நீதிக்கட்சி ஆரம்பித்தது தான் எல்லாமே. அப்படி வரும்போது, தாய்மொழியை தூக்கிவிடுவோம், எடுத்து விடுவோம் என்று சொல்வது உள்ளபடியே வேதனைக்கு உரியதாக தான் இருக்கிறது.
அவர் பேசுவதே தமிழில் தான் பேசுகிறார். எங்களை திட்டுவதும் தமிழில்தான். பாராட்டுவதும் தமிழில்தான் பாராட்டுகிறார். அப்படி பேசுகிறவர் இப்படி பேசி இருப்பது உள்ளபடியே வேதனைக்குரிய ஒன்றாகத்தான் பார்க்கின்றோம்.
இவ்வாறு அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.