அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்
ADDED : ஜன 24, 2025 01:09 AM

சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், தி.மு.க., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின், 1.2A6 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்கள், அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். தமிழக அமைச்சரவையில், மீனவர் நலன் மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறை அமைச்சராக உள்ளார். 2001 - 2006ம் ஆண்டு வரை, அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.
வழக்கு பதிவு
கடந்த 2006ல், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், துாத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார், வருமானத்திற்கு அதிகமாக, 4.90 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக, அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தம், மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்தனர்.
ஆவணங்கள்
தொடர் விசாரணையில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர், சட்ட விரோத பணப்பரிமாற்றம் வாயிலாக, ஒரு கோடி ரூபாய்க்கு, 18 வகையான சொத்துக்களை வாங்கியது தெரிய வந்தது.
மேலும், சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தை, குறுகிய காலத்தில் பல நிறுவனங்களில் முதலீடு செய்து, கடன் வாங்கியது போல ஆவணங்கள் தயார் செய்து கணக்கு காண்பித்து, 17.74 கோடி ரூபாய் வரை சம்பாதித்து இருப்பதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான, சென்னை, மதுரை, துாத்துக்குடியில் உள்ள, 1.26 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களை, அமலாக்கத்துறை நேற்று முடக்கியது.
இவ்வழக்கில் ஏற்கனவே, 160 ஏக்கர் நிலம் உட்பட, 6.50 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.