ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
UPDATED : ஆக 22, 2024 01:03 PM
ADDED : ஆக 22, 2024 12:57 PM

சென்னை: ‛‛ தமிழகத்திற்கு கூடுதலாக வழங்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும் '' என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தமிழக உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்படும் அரிசியை தவிர்த்து, பொது விநியோக திட்டம், மதிய உணவு மற்றும் காலை உணவுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மாதந்தோறும் 75 ஆயிரம் டன் கூடுதல் அரிசி தேவைப்படுகிறது. ஜூலை மாதம் மத்திய அரசு அனுப்பிய கடிதத்தில், அந்த அரிசி கிலோ ரூ.28 க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த அரிசியை ஏற்கனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20க்கே வழங்க வேண்டும்.
மாநிலத்திற்கு கூடுதலாக தேவைப்படும் 2,756 டன் கேழ்வரகை மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்து வருகிறது. மாதம் 23 ஆயிரம் டன் கோதுமை சராசரியாக தேவைப்படுகிறது. இதனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
டில்லியில் க்ரிஷி பவனில் நடந்த இந்த சந்திப்பின் போது , தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா, தமிழக உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மத்திய உணவுத்துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக மேலாண் இயக்குநர் அண்ணாதுரை, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இது குறித்து ராதாகிருஷ்ணன் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நிலுவையில் உள்ள பிரச்னைகள், தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினோம் எனக்கூறியுள்ளார்.