போக்சோ வழக்குகள் அதிகரிக்க காரணம் என்ன: அமைச்சர் விளக்கம்
போக்சோ வழக்குகள் அதிகரிக்க காரணம் என்ன: அமைச்சர் விளக்கம்
ADDED : ஏப் 17, 2025 12:33 AM
சென்னை:''தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்டவர்களின் காதல் திருமணங்களால், போக்சோ வழக்குகள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது,'' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., மரகதம் குமரவேல்: தி.மு.க., ஆட்சியில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு எதிராக, பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
அமைச்சர் கீதா ஜீவன்: 2021ல், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், சமூக நலத்துறையின் முதல் ஆய்வுக் கூட்டத்திலேயே, பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதன்படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க, போக்சோ சட்டத்தை, தமிழக அரசு திறம்பட அமல்படுத்தி வருகிறது. இச்சட்டம் குறித்து, சமூகநலம், பள்ளிக்கல்வி, காவல், சட்டம், நீதித்துறை என, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வாலும், சட்ட அமைப்புகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து புகார் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு பாதுகாப்பான சூழல் தமிழகத்தில் உள்ளது.
மேலும், 18 வயதுக்கு உட்பட்டோர் காதல் திருமணம் செய்தால், அந்த வழக்குகளும், போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் பதிவான 8,468 போக்சோ வழக்குகளில், 67.87 சதவீதம், 18 வயதுக்கு உட்பட்டோரின் காதல் திருமணம் சம்பந்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் போக்சோ வழக்குகள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

