'கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல' அமைச்சர் முத்துசாமி 'ஓபன் டாக்'
'கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல' அமைச்சர் முத்துசாமி 'ஓபன் டாக்'
ADDED : பிப் 09, 2025 05:07 AM

ஈரோடு: ''இன்றைய கால கட்டத்தில் கள்ள ஓட்டு போடுவது அவ்வளவு எளிதல்ல. தேர்தல் கமிஷன் கெடுபிடியாகவே உள்ளது. நியாயமான முறையில் இத்தேர்தலை தி.மு.க., அணுகியது. தேர்தலும் நியாயமாக நடந்தது,'' என தமிழகவீட்டு வசதித்துறை அமைச்சர் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார்வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின், அமைச்சர் முத்துசாமி, ஓட்டு எண்ணிக்கை நடந்த, சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் இருந்து கிளம்பினர்.
அப்போது அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 2021ம் ஆண்டுக்கு பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும், மக்கள் தி.மு.க.,வுக்கு துணை நிற்கின்றனர். முதல்வரின் நலத் திட்டங்களால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
இத்தேர்தலை அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் புறக்கணித்திருக்கக்கூடாது. அவர்கள் போட்டியிட்டிருந்தாலும், கடந்த முறை எவ்வளவு ஓட்டுக்களை பெற்றார்களோ, அதையேதான் வாங்கி இருப்பார்கள்.
அவர்கள் போட்டியிடாததால், எதிர்கட்சி ஓட்டு களில் பெரும்பாலும், அரசின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க., பக்கம் திரும்பி உள்ளது. சில ஓட்டுகள், நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளன.
அதேநேரம், அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள், தேர்தலில் போட்டியிடாததால், நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு அதிகரித்துள்ளது. ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியதையெல்லாம் மக்கள் ஏற்கவில்லை. அதனாலேயே, தி.மு.க., மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க., போலி வெற்றி பெற்றிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கூறுவதுதவறு. இன்றைய கால கட்டத்தில் கள்ள ஓட்டு போடுவது அவ்வளவு எளிதல்ல. தேர்தல் கமிஷன் கெடுபிடியாகவே உள்ளது. நியாயமான முறையில் இத்தேர்தலை தி.மு.க., அணுகியது. தேர்தலும் நியாயமாக நடந்தது.
இவ்வாறு முத்துசாமி கூறினார்.
'டில்லி தேர்தல் முடிவுகள், 'இண்டியா' கூட்டணிக்கு விழுந்த சம்மட்டி அடி' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியது பற்றி நிருபர்கள்கேட்டதும், ''ஒரு மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஒரு கட்சிக்கு விழுந்த ஓட்டு குறைவு என்றதும், மொத்த கூட்டணிக்கும் விழுந்த அடியாக பார்த்தால், ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., பெற்ற வெற்றி என்பது, அ.தி.மு.க.,வுக்கு விழுந்த அடி என நாங்கள் கூறினால், பழனிசாமி அதை ஏற்பாரா. 'இண்டியா' கூட்டணியை எந்த காலத்திலும் வீழ்ந்த முடியாது,'' என்றார்.

