அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில மோசடி புகார் வாபஸ்
அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான நில மோசடி புகார் வாபஸ்
ADDED : ஜூலை 22, 2011 11:58 PM
திருவண்ணாமலை : அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது, நில மோசடி புகார் செய்தவர், அதை வாபஸ் பெற்றார்.
திருவண்ணாமலையை அடுத்த, வேங்கிக்கால் பஞ்சாயத்து துணை தலைவர் அ.தி.மு.க.,மாவட்ட பிரதிநிதியான மூர்த்தி. இவர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள தென்பள்ளிப்பட்டு சாலையில், இவருக்கும் பரசுராமன் மற்றும் மாரிமுத்து ஆகிய மூவருக்கும் சொந்தமான நிலம், 4 ஏக்கர் 60 சென்ட்டை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மோசடி செய்து பெற்று கொண்டு, பணத்தை கொடுக்க மறுத்து வருகிறார், எனக்கு பணத்தையோ அல்லது மோசடி செய்து எழுதி வாங்கி கொண்ட நிலத்தையோ, திரும்ப பெற்று தர வேண்டும் என, கடந்த 20ம் தேதி போலீசில் புகார் செய்தார்.
புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அ.தி.மு.க., தலைமையும் இந்த புகார் மீது, விசாரணை நடத்தியது. இந்த புகார் தொடர்பாக, அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க., சார்பில் மூர்த்தி மற்றும் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருதரப்பையும் அழைத்து, நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர்.
அப்போது, புகாரை வாபஸ் பெறுமாறு மூர்த்திக்கு, பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. நேற்று மூர்த்தி, எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்து, புகார் மனுவை வாபஸ் பெறுவதாக எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட போலீசார், எஸ்.பி., சாமுண்டீஸ்வரி அலுவலக வேலை காரணமாக சென்னை சென்றுள்ளார். அவரிடம் நீங்கள் நேரில் சந்தித்து காரணத்தை கூறி, புகார் மனுவை வாபஸ் பெற்றுச் செல்லுமாறு கூறி அனுப்பி விட்டனர்.