ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிதியில்லை அமைச்சர் கைவிரிப்பு
ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நிதியில்லை அமைச்சர் கைவிரிப்பு
ADDED : அக் 17, 2025 10:28 PM
சென்னை:''வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு, சொந்த கட்டடங்கள் கட்ட அரசிடம் நிதியில்லை,'' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - விஜயகுமார்: திருப்பூர் மாநகராட்சி ஐந்தாவது வார்டில், எஸ்.ஆர்.வி.நகரில் உள்ள ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. சொந்த கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் பெரியகருப்பன்: தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 5,861 ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றன. ரேஷன் கடைகள் கட்ட அரசு தனியாக நிதி ஒதுக்குவது கிடையாது.
கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு மட்டுமே நிதி அனுமதி அளிக்கப்படுகிறது. மற்ற கடைகள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதியில் கட்டப்படுகின்றன.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்த கட்டடம் கட்டுவதற்கு நிதியில்லை. சொந்த கட்டடம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், எம்.எல்.ஏ., உடனடியாக நிதி ஒதுக்கினால், பணி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.