4,000 கோவில்கள் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
4,000 கோவில்கள் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
ADDED : அக் 16, 2025 07:43 PM
சென்னை:''அடுத்த ஆண்டு ஜனவரி, 26ம் தேதிக்குள், 4,000 கோவில்களின் கும்பாபிஷேகம் நிறைவு பெறும்,'' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - முத்துராஜா: புதுக்கோட்டை தொகுதியில் உள்ள, ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை கர்ணேஸ்வரர் கோவிலுக்கு திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலில், 46 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு ஜன., 26ம் தேதி கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. அன்றோடு தற்போதைய தி.மு.க., ஆட்சியில், 4,000 கோவில்களின் கும்பாபிஷேகம் நிறைவு பெறும்.
முத்துராஜா: புதுக்கோட்டை கீழமூன்றாம் வீதியில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகின்றன.
திருப்பணி விரைவாக நடக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பல்லவன் குளத்தை துார்வாரி, மழைநீர் வடிகால்களை சரி செய்ய வேண்டும்.
அமைச்சர் சேகர்பாபு: நடவடிக்கை எடுக்கப்படும்.
அ.தி.மு.க., - அய்யப்பன்: உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட, வி.கோவில்பட்டி கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான மருதப்ப சுவாமி கோவில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் திருப்பணி முடியவில்லை.
அமைச்சர் சேகர்பாபு: தை மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
தி.மு.க., - நல்லதம்பி: திருப்பத்துார் தொகுதியில் உள்ள பசலிகுட்டை முருகன் கோவிலில் திருப்பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர் சேகர்பாபு: இக்கோவிலில், 11.40 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன. எம்.எல்.ஏ.,வும் மற்றவர்களும் இணைந்து, 7 கோடி ரூபாய் நிதி வழங்க ஒப்புதல் கடிதம் அளித்துள்ளனர். மேலும் தேவைப்படும் நிதி, பொது நல நிதியிலிருந்து வழங்கப்படும். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.