பக்தர்கள் வருகைக்கு ஏற்ப தி.மலையில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
பக்தர்கள் வருகைக்கு ஏற்ப தி.மலையில் வளர்ச்சி பணிகள் அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
ADDED : அக் 17, 2025 07:37 PM
சென்னை: ''திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவிலிலுக்கு பக்தர்கள் வருகை, 70 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட் டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - பிச்சாண்டி: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு அதிகளவில் தெலுங்கானா, ஆந்திரா மாநில பக்தர்கள் வருகின்றனர்.
அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்யும் போது, பல தடைகள் ஏற்படக்கூடிய நிலை இருக்கிறது. எனவே, கோவிலுக்கு அரசின் வாயிலாக என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன?
அமைச்சர் சேகர்பாபு: தடைகள் ஏற்படுத்தப்படுவது உண்மை தான். இருப்பினும், சட்ட போராட்டங்களுக்கு இடையே வெற்றி பெற்று வருகிறோம். சமீபத்தில் கூட, உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் களஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து, 17 பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த ஆட்சி அமைவதற்கு முன், அந்த கோவிலுக்கு வந்த பக்தர்களை விட, தற்போது, 70 சதவீதம் கூடுதலாக வருகின்றனர்.
நாள்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
பக்தர்கள் தங்கும் விடுதி, 64.3 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 12 இடங்களில் செய்யப்பட்டு உள்ளது. கிரிவல பாதையில், 12 இடங்களில் கழிப்பறை வசதிகள், நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் செய்யப்பட்டு வருகின்றன.
லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், 4.50 கோடி ரூபாய் செலவில், தரிசன வரிசை காம்ப்ளக்ஸ் ஏற்படுத்தும் பணியும் நடக்கிறது. பெருந்திட்ட வரைவின் வாயிலாக கோவிலில் பல்வேறு பணிகளை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.