கோவில் தங்கம் டெபாசிட்டால் கிடைத்தது ரூ.17 கோடி வட்டி அமைச்சர் சேகர்பாபு தகவல்
கோவில் தங்கம் டெபாசிட்டால் கிடைத்தது ரூ.17 கோடி வட்டி அமைச்சர் சேகர்பாபு தகவல்
ADDED : ஜன 09, 2025 10:48 PM
சென்னை:''கோவிலுக்கு காணிக்கையாக வரும் தங்கத்தை உருக்கி, 1,100 கோடி ரூபாய் அளவிற்கு வங்கியில் வைப்பு நிதி வைக்கப்பட்டு, அதன் வாயிலாக, 17 கோடி ரூபாய் வட்டி வருமானம் கிடைத்துள்ளது,'' என, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம், நெட்டூர் சுப்பிரமணியசாமி கோவில், பூலான்குளம் உச்சிமாகாளி கோவில், பாப்பிக்குடி, திருக்கடுகை முன்றீஸ்வரர் கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். உச்சிமாகாளி கோவிலில் ராஜகோபுரம், விமானம், தரைத்தளம் அமைக்க வேண்டும்.
கடையம் பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள கருத்தீஸ்வரர் சமேத அழகம்மாள் கோவிலுக்கும், பள்ளக்கால் புதுக்குடி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலுக்கும், திருப்பணி மற்றும் கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். கோவிலில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்களை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி, 'டிபாசிட்' செய்வதற்காக அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
அமைச்சர் சேகர்பாபு: திருக்கடுகை முன்றீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் முடிந்து விட்டது. மற்ற இரண்டு கோவில்களுக்கும் நடப்பாண்டு இறுதிக்குள் கும்பாபிேஷகம் நடத்தப்படும்.
உச்சி மாகாளியம்மன் கோவிலில் ஏற்கனவே மடப்பள்ளியும், உலோக திருமேனி பாதுகாப்பு அறையும் கட்டப்பட்டு உள்ளது. திருக்கருத்தீஸ்வரர் கோவிலில், 1942ம் ஆண்டு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டு உள்ளது. மாநில வல்லுநர் குழு அனுமதி பெற்று, 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் துவங்கப்பட உள்ளன.
வெங்கடாஜலபதி கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. புனரமைக்க, 8 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டு உள்ளது.
கோவிலுக்கு காணிக்கையாக வரும் தங்கத்தை உருக்கி, 1,100 கோடி ரூபாய் அளவிற்கு வங்கியில் வைப்பு நிதி வைக்கப்பட்டு, அதன் வாயிலாக, 17 கோடி ரூபாய் வட்டி வருமானம் கிடைத்து உள்ளது.
அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: கோவில்பட்டி, கயத்தாறு திருமலைநாயகி சமேத முத்துகிருஷ்ண சுவாமி கோவிலில் திருப்பணிகள் துவங்கி, நான்கு ஆண்டுகளாக நிறைவு பெறாமல் உள்ளன. பணியை விரைந்து முடித்து கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். நிதி பற்றாக்குறையால் பணி பாதிக்கப்பட்டுள்ளது; கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.
அமைச்சர்: முத்துகிருஷ்ண சுவாமி கோவிலில், 2020ம் ஆண்டு திருப்பணி துவங்கப்பட்டது உண்மை.
அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. தற்போது ஆறு பணிகளுக்கு 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் நடத்தப்படும்.
தி.மு.க., - பழனியாண்டி: ஸ்ரீரங்கம் தொகுதி குமாரவயலுார் முருகன் கோவில் கும்பாபிேஷகம் எப்போது நடத்தப்படும்?
அமைச்சர் சேகர்பாபு: குமாரவயலுார் முருகன் கோவிலுக்கு, பிப்ரவரி 19ல் கும்பாபிேஷகம் நடத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.