அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபசாகுமா?
அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை: பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக் வாபசாகுமா?
ADDED : ஜன 08, 2024 07:14 AM

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சருடன் இன்று(ஜன.,8) பேச்சு நடத்த உள்ளன. இதில், உடன்பாடு ஏற்படாவிட்டால் திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளன.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம், 19ம் தேதி, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட, 26 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.
வேலை நிறுத்தத்தை தவிர்க்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்படி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, இதுவரை மூன்று கட்ட பேச்சு நடந்துள்ளது. இருப்பினும், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் நேற்று பேசுவதாக இருந்தது. ஆனால், உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று துவங்கியதால், அமைச்சருடன் இன்று பேச்சு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று காலை, 11:00 மணிக்கு கூட்டம் நடக்கிறது.
ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நான்கு மாத அகவிலைப்படி உயர்வு, ஊதிய ஒப்பந்த பேச்சு தேதி அறிவித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என, தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.