இலக்கை தாண்டி கூடுதல் ரத்த தானம்: அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்
இலக்கை தாண்டி கூடுதல் ரத்த தானம்: அமைச்சர் சுப்பிரமணியன் பெருமிதம்
ADDED : அக் 11, 2025 01:10 AM
சென்னை:“தமிழகத்தில், ரத்த தான இலக்கை தாண்டி கூடுதல் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது,” என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், தேசிய தன்னார்வ ரத்த தான நாள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
தமிழகம், தன்னார்வ ரத்த தானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில், 101 அரசு ரத்த மையங்கள், 252 தனியார் ரத்த மையங்கள் உள்ளன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 415 ரத்த சேமிப்பு மையங்கள் இருக்கின்றன.
கடந்த 2024 - 25-ல், அரசு மற்றும் தனியார் ரத்த மையங்கள் வாயிலாக, 9.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள சுகாதார பொது இயக்குநரகத்தால், 2024- - 25ல், 4.50 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்க, அரசு ரத்த மையங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உரிமம் பெற்ற அரசு ரத்த மையங்களில், 4,354 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, 4.53 லட்சம் ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டன. தமிழகம் இலக்கை தாண்டி, 101 சதவீதம் ரத்த தானம் பெற்றுள்ளது.
ரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, https://eraktkosh.mohfw.gov.in/eraktkoshPortal/#/ என்ற இணையதளம் உள்ளது. இதில், ரத்த வகைகளின் இருப்பை தெரிந்துகொள்ளும் வசதிகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.