அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
அதிக மழை பெய்தும் பாதிப்பில்லை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
ADDED : டிச 02, 2024 12:56 AM

சென்னை: ''தமிழக அரசு எடுத்த நடவடிக்கையால், அதிக அளவில் மழை பெய்த போதும், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
'பெஞ்சல்' புயல் மழையால் பாதிக்கப்பட்ட, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், நேற்று, 500 இடங்களில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. சென்னை கிண்டி மடுவங்கரை பகுதியில் நடந்த முகாமை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்து பேசியதாவது:
கடந்த காலத்தில் புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு பணிகளால், மிகப்பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம் மாவட்டம், மயிலம் போன்ற இடங்களில், 50 செ.மீ., மழை பெய்துள்ளது. சென்னையில், 24 மணி நேரத்தில், 18 முதல் 20 செ.மீ., மழை பெய்தது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், மழை அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை. அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, மழைக்கால சிறப்பு முகாம் நடந்து வருகிறது. ஒன்றரை மாதங்களில், 51,707 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 28 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். சென்னையின் நீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளில், 7 டி.எம்.சி., அளவில் தான் நீர் உள்ளது. இன்னமும் மழை வந்தால் தான், வருங்காலங்களில் குடிநீர் பஞ்சம், வறட்சி ஏற்படாமல் இருக்கும். தற்போது, 500 மருத்துவ முகாம்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு பருவமழை முடியும் வரை, மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும்.
சென்னை தவிர, மழை தொடர்ந்து பெய்து வரும், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், 300 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.