தமிழகம் வரும் வட மாநிலத்தவர் கையில் 2 கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர்: திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு
தமிழகம் வரும் வட மாநிலத்தவர் கையில் 2 கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர்: திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு
UPDATED : பிப் 22, 2026 07:19 AM
ADDED : பிப் 20, 2026 07:39 PM

சென்னை: வட மாநிலத்தவர், தமிழகம் வரும்போது, கையில் இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
'தமிழகம் தலைகுனியாது' என்ற தலைப்பில், சென்னை நங்கநல்லுாரில், திமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது: வடமாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு தினந்தோறும் 10,000த்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். அவர்கள், தமிழகம் வரும்போது, கையில் தலா இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், அதிமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இது போல் கஞ்சா பழக்கம் வந்திருக்காது.
தற்போது, திமுக அரசு போதைப்பொருளை ஒழிப்பதில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் கஞ்சாவிற்கு தடை இல்லை. ஆனால், தமிழகத்தில் கஞ்சாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், திமுக எம்பி கனிமொழி சோமு பேசியதாவது:
இரு மொழிக் கொள்கையில் படித்தவர்கள் தான், வெளிநாடுகளில் உள்ள பல உயர் நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். ஆனால், ஹிந்தி படித்த பெரும்பாலானோர் கஞ்சாவும், பானிப்பூரியும் விற்கின்றனர்.
மத்திய பாஜ, அரசு, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வஞ்சனை செய்துள்ளது. அவர்கள், வயிற்றில் ஈர துணியை போட்டு அனுப்பினர். வரும் தேர்தலில், நாம் அவர்கள் தலையில் முக்காடு போட்டு அனுப்ப வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூற, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு தகுதியே இல்லை. அவர் ஆட்சியில் தான், துாத்துக்குடி துப்பாக்கி சூடு, கோடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் என அரங்கேறின.
இவ்வாறு அவர் பேசினார்.

