சுவடியியல் ஓராண்டு பட்டய படிப்பு மதுரையில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சுவடியியல் ஓராண்டு பட்டய படிப்பு மதுரையில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
ADDED : ஏப் 18, 2025 12:55 AM
சென்னை:''திருப்புல்லாணி அரண்மனை உள்ளிட்ட 12 இடங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களாக அறிவிக்கப்படும்,'' என, நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோவில் தமிழி கல்வெட்டு, சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் கூத்தபூண்டியான் வலசு, புதுக்கோட்டை மாவட்டம் வி.கோட்டையூர், திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் ஆகிய இடங்களில் உள்ள குடவரைகள், பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டம், நாயனுாரில் உள்ள முற்றுப்பெறாத குடவரை, கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லச்சந்திரம் பெருங்கற்கால கல் திட்டைகள், ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரண்மனை ஆகியவையும், பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மறையூர் சத்திரம், மீனாட்சிபுரம் வானிறைக்கல், குகை ஓவியம், புடைப்புச் சிற்பங்கள், மம்சாபுரம் நாயக்கர் கால மண்டபம், பிள்ளையார் நத்தம் மண்டபம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள், தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறிவிக்கப்படும்.
கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள், தரங்கம்பாடி கோட்டை ஆகியவற்றில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒலி ஒளிக் காட்சி அமைக்கப்படும்.
தமிழின் தொன்மை, பண்டைய தமிழக அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றை பறைசாற்றும் கல்வெட்டுகளை காலவாரியாக தொகுத்து, மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில், கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
அண்மை காலத்தில் தமிழகத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், 30 லட்சம் ரூபாயில், தேசிய கருத்தரங்கம் நடத்தப்படும்.
தமிழக வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் வணிக குழு கல்வெட்டுகள், பெருவழி, செக்கு, துாம்பு கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவற்றை மின்பதிப்பாக்கம் செய்து, நுால் வடிவிலும், இணையதளத்திலும் வெளியிடப்படும்.
தமிழகத்தின் ஒவ்வொரு பண்பாட்டு மண்டலத்தின் தனித்தன்மையை பிரதிபலிக்கும் வகையில், 'தமிழகத்தின் பண்பாட்டு வரலாறு' என்ற தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும்.
நிலவியல், வரலாற்று பின்னணியில், 12 லட்சம் ரூபாயில், 'திணை நில வரைபடம்' உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
அண்மைக்கால தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் மற்றும் இலக்கிய சான்றுகளின் அடிப்படையில், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் காலனித்துவத்திற்கு முந்தைய காலம் வரையிலான வரலாறு, பாடநுால் வடிவில், 'தமிழக வரலாற்று நுால்கள் வரிசை' என்ற தலைப்பில் வெளியிடப்படும்.
தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில், 31 லட்சம் ரூபாயில் சுவடியியல் என்ற ஓராண்டு பட்டயப் படிப்பு அறிமுகப்படுத்தப்படும்.
தமிழக தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, 6,000 ரூபாயில் இருந்து, 8,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.