பிளாஸ்டிக் நாற்காலி கிலி: திருமாவை தடுத்த அமைச்சர்
பிளாஸ்டிக் நாற்காலி கிலி: திருமாவை தடுத்த அமைச்சர்
ADDED : ஏப் 17, 2026 12:04 AM

அ மைச்சர் அன்பரசன் அலுவலகத்தில், பிளாஸ்டிக் நாற்காலியில் அமர முயன்ற வி.சி.க., தலைவர் திருமாவளவனை, அமைச்சர் அன்பரசன் தடுத்து வேறு நாற்காலியில் அமர வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளில் சமீபத்தில் பிரசாரம் செய்த வி.சி.க., தலைவர் திருமாவளவன், திருக்கழுக்குன்றத்தில் அமைச்சர் அன்பரசன் அலுவலகத்திற்கு சென்றார். அவரை அமைச்சர் வரவேற்றதும், உள் அறையில் இருந்து, 'ஒயர்' நாற்காலி எடுத்து வந்தனர்.
திருமாவளவன் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர சென்றார். அதை கண்ட அமைச்சர் அன்பரசன், அவரை தடுத்து ஒயர் நாற்காலியில் அமர சொன்னார். திருமாவளவன் அமர மறுத்து, நீங்கள் அமருங்கள் எனக்கூறி, மீண்டும் பிளாஸ்டிக் நாற்காலியில்அமர சென்றார்.
அவரை தடுத்து நிறுத்திய அமைச்சர், உள்ளே இருந்து அவரது குஷன் நாற்காலியை எடுத்து வரச்சொல்லி, அதில் அமர்ந்து கொண்டார். ஒயர் நாற்காலியில் திருமாவளவன் அமர்ந்தார்.
ஏற்கனவே, தி.மு.க., அமைச்சர் ராஜ கண்ணப்பன், குஷன் நாற்காலியில் அமர்ந்திருக்க, திருமாவளவனை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்தது, வி.சி.க.,வினர் மட்டுமின்றி, பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தி.மு.க.,வினர் ஜாதிய உணர்வுடன் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதுபோன்ற சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்க, அமைச்சர் அன்பரசன், அவரை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர அனுமதிக்கவில்லை என, வி.சி.க.,வினர் தெரிவித்தனர்.
