பொங்கல் பரிசு ரூ.5,000? கொடுக்க அமைச்சர்கள் நெருக்கடி: அதிகாரிகள் கைவிரிப்பு
பொங்கல் பரிசு ரூ.5,000? கொடுக்க அமைச்சர்கள் நெருக்கடி: அதிகாரிகள் கைவிரிப்பு
UPDATED : நவ 26, 2025 11:56 PM
ADDED : நவ 26, 2025 11:49 PM

சென்னை, 'அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பதால், பொங்கல் பரிசாக ரேஷனில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என அமைச்சர்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஆனால், 'கஜானாவில் காசே இல்லை; 11,000 கோடி ரூபாய்க்கு எங்கே போவது?' என, நிதித் துறை அதிகாரிகள் எதிர்ப்புக் கொடி துாக்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் கடைசியாக, 2021 பொங்கலுக்கு, ஒரு கார்டுதாரருக்கு 2,500 ரூபாய் வழங்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் கடந்த 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. பின், 2022 பொங்கலுக்கு, 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2023, 2024 பொங்கல் பண்டிகை களின்போது தலா, 1,000 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன. இந்தாண்டு பொங்கலுக்கு பணம் இல்லாமல், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை மட்டும் வழங்கப்பட்டன.
வரும் 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை தக்க வைக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இதனால், ஜனவரியில் ரேஷனில் பொங்கல் பரிசாக தலா, 5,000 ரூபாய் வழங்கினால், தேர்தல் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அமைச்சர்களும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும் கருதுகின்றனர்.
இதை அதிகாரிகளிடம், அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை சென்னையில் முதல்வர் துவக்கி வைத்ததும், மற்ற மாவட்டங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கார்டுதாரர்களுக்கு வழங்க திட்டமிட்டு உள்ளனர்.
கடன் சுமை அதிகரிக்கும் கடந்த ஆண்டு பணம் இல்லாமல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதால், அமைச்சர்கள் உட்பட யாரும் வினியோகம் செய்ய செல்லவில்லை.
வரும் ஆண்டு தேர்தல் நடக்கிறது; வரும் பொங்கலுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என, மூத்த அமைச்சர்கள் பலர், கூட்டுறவு மற்றும் உணவுத் துறை, நிதித் துறை உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், போதிய நிதி இல்லாததால், இதற்கு நிதித் துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் பொங்கலுக்கு, 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு தலா, 5,000 ரூபாய் வழங்குவதற்கு, 11,000 கோடி ரூபாய் செலவாகும்.
மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில், விடுபட்ட 2.75 லட்சம் மகளிருக்கு, அடுத்த மாதம் முதல் தலா, 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதனால், அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட உள்ளது. ஏற்கனவே, அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.
இந்த சூழலில், தேர்தலுக்காக பொங்கல் பரிசில் 5,000 ரூபாய் வழங்கினால், கடன் சுமை அதிகரிக்கும். அதற்காக செலவிடப்படும் 11,000 கோடி ரூபாயை, சுகாதார, பள்ளி கட்டமைப்புகள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு செலவிட்டால், மக்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

