அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை
அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு: விசாரணைக்கு இடைக்கால தடை
ADDED : ஏப் 16, 2026 12:30 AM

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, துாத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 2001- - 2006ம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக, 2.7 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை, 2019ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, துாத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, 2025ம் ஆண்டு சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், மதுரை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தாக்கல் செய்தது.
இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை, மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, துாத்துக்குடி சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரிக்க அதிகாரம் இல்லை என கூறி, அந்த மனுவை நிராகரித்து, துாத்துக்குடி நீதிமன்றம், கடந்த ஆண்டு டிச., 11ல் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும், உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில், 'இந்த மனு தாக்கல் செய்துள்ள விபரத்தைத் தெரிவித்தும், துாத்துக்குடி நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், 'துாத்துக்குடி நீதிமன்ற வழக்கின் தற்போதைய நிலை குறித்து, விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்' என கோரப்பட்டது.
இதை ஏற்று வழக்கின் விசாரணையை, வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், துாத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
