கனிம வள கொள்ளைகளுக்கு துணை போகும் அமைச்சர்கள்: அண்ணாமலை
கனிம வள கொள்ளைகளுக்கு துணை போகும் அமைச்சர்கள்: அண்ணாமலை
UPDATED : ஜன 11, 2026 02:42 PM
ADDED : ஜன 11, 2026 02:30 PM

சென்னை: கனிம வள கொள்ளை செயல்களுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் இருவருமே துணை நிற்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியைச் சேர்ந்தவர் சு.சந்திரசேகர். இவர் திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகக் குற்றம்சாட்டி தான் வகித்த பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் கட்டுக்கடங்காத சட்டவிரோத கனிமக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு வேண்டுமென்றே செயலற்று இருப்பதைக் கண்டித்து, ஒரு திமுக நிர்வாகி தனது கட்சிப் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.
இந்தக் கடுமையான பிரச்னையைத் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் பலமுறை சுட்டிக்காட்டிய போதிலும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டவிரோத சுரங்கம் தோண்டுதல் தமிழகத்தில் ஆழமாக வேரூன்றிய ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இருந்தபோதிலும், ஊழல் நிறைந்த இந்த திமுக ஆட்சியின் முன்னுரிமைப் பட்டியலில் இது கடைசி இடத்தில் கூட இடம்பெறவில்லை.
இந்தச் சட்டவிரோதச் செயல்களுக்கு முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்கள் இருவருமே துணை நிற்கின்றனர். ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான லாரிகள் சட்டவிரோதமாக மாநில எல்லைகள் வழியாகக் கனிமங்களைக் கடத்திச் செல்கின்றன. இது அப்பகுதி மக்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தை ஏற்படுத்துவதுடன், பிராந்தியத்தின் இயற்கை வளங்களின் மீளமுடியாத அழிவையும் வேகப்படுத்துகிறது.
திமுக இப்போது உண்மையான பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அந்தப் பிரச்னையை எழுப்பியவரைக் களங்கப்படுத்துவதிலேயே தனது கவனத்தை செலுத்தும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

