விமானப்படை ஓடுபாதையை பயன்படுத்த ராணுவ அமைச்சகம் நிபந்தனை
விமானப்படை ஓடுபாதையை பயன்படுத்த ராணுவ அமைச்சகம் நிபந்தனை
ADDED : நவ 11, 2025 05:17 AM

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் விமான சோதனை மையம் அமைக்க, விமான படைக்கு சொந்தமான விமான ஓடுபாதையை பயன்படுத்த, ராணுவ அமைச்சகத்திடம், தமிழக அரசு அனுமதி கேட்டுஉள்ளது.
அதற்கு விமான தளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தருமாறு, ராணுவ அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை, திருச்சி, சேலம், கோவை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆகிய நகரங்களை உள்ளடக்கி, ராணுவ தொழில் வழித்தடம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், வான்வெளி மற்றும் ராணுவ துறையில், அடுத்த 10 ஆண்டுகளில், 75,000 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்த துறை நிறுவனங்கள் தொழில் துவங்க, தனி தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் விமான படைக்கு சொந்தமான விமானப்படை தளம் அருகில், சென்னை ஐ.ஐ.டி., உடன் இணைந்து, சர்வதேச தரத்தில் விமானங்களை சோதனை செய்யும் மையத்தை அமைக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அங்கு தொழில் துவங்கும் நிறுவனங்கள், உளுந்துார்பேட்டை விமான ஓடுதளத்தை பயன்படுத்த, ராணுவ அமைச்சகத்திடம், தமிழக அரசு, இரு ஆண்டுகளுக்கு முன் அனுமதி கேட்டது; இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், விமான ஓடுபாதையை பயன்படுத்த, விமானப்படைதளத்தை சுற்றி வேலி அமைத்து தருமாறு, தமிழக அரசை ராணுவ அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உளுந்துார்பேட்டை விமானப்படை தளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து தருமாறு, ராணுவ அமைச்சகம் தரப்பில் கேட்கப்பட்டது. அதை அமைத்தால், அருகில் அமைக்கப்பட உள்ள விமான சோதனை மையத்தில் இடம்பெறும் நிறுவனங்களால், விமான ஓடுபாதையை எப்படி பயன்படுத்த முடியும்?
எனவே, விமான சோதனை மையம் அமைய உள்ள இடத்தையும் சேர்த்து, சுற்றுச்சுவர் அமைத்து தருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை ஏற்கப்படாததால், விமான ஓடுபாதையை பயன்படுத்த, இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. தொடர்ந்து, அனுமதி பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

