ஒரே இடத்தில் பெஞ்சு தேய்த்த அமைச்சு பணியாளர்கள் மாற்றம்
ஒரே இடத்தில் பெஞ்சு தேய்த்த அமைச்சு பணியாளர்கள் மாற்றம்
ADDED : நவ 06, 2025 12:34 AM
சென்னை:காவல் துறையில் கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் 32 பேர், இடமாற்றம் செய்யப்பட்டனர்.
காவல் துறையில் பணிபுரியும் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு ஊதியம், பதவி உயர்வு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட பயன்கள் கிடைக்க அமைச்சுப் பணியாளர்கள் கோப்புகள் தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு அனுப்புவர்.
அவர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவது இல்லை. கோப்புகளை அதிகாரிகளுக்கு அனுப்புவதில் காலதாமதம் செய்கின்றனர் என, போலீசார் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், லஞ்சம் வாங்கும் போலீசாரிடமே, அமைச்சு பணியாளர்கள் லஞ்சம் வாங்கும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரியும் அமைச்சு பணியாளர்களை இடமாற்றம் செய்ய, காவல் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். பலர், சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இடமாற்றம் கோரி மனு அளித்திருந்தனர்.
அவற்றை பரிசீலித்து, காவல் துறை நிர்வாகப்பிரிவு ஐ.ஜி., பாலகிருஷ்ணன், மாநிலம் முழுதும் காவல் துறை அலுவலகங்களில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் அமைச்சு பணியாளர்கள் 32 பேரை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதுபோல், உதவியாளர்கள் பதவியில் இருந்த, 22 பேருக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, புதிய பணியிடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

