UPDATED : ஜூலை 27, 2011 02:04 AM
ADDED : ஜூலை 26, 2011 11:59 PM

ராமநாதபுரம்:மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியை கடத்தி, இரண்டரை ஆண்டுகளாக விபசாரத்தில், ஒரு கும்பல் ஈடுபடுத்தியது.
சிறுமியை கற்பழித்ததாக, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் உட்பட பலர் மீது, ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மதுரை, திருமங்கலம் அருகே வாகைக்குளத்தை சேர்ந்த, சிவசாமியின் மகள் ஈஸ்வரி, 17, (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மூன்றாண்டுகளுக்கு முன், திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளி கடையில், வேலை பார்த்தார்.
ஒரு நாள் இரவு ஊர் திரும்ப, பஸ்சிற்கு பணம் இல்லாமல், திருமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தார்.அப்போது, உடன் வேலை பார்த்த தோழியின் தாயார், அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, வேறு நல்ல வேலை வாங்கி தருவதாக, மூளைச் சலவை செய்தார். பிறகு, மதுரை கீழ்க்குடியை சேர்ந்த, சத்யா என்பவரிடம், பணம் பெற்று சிறுமியை ஒப்படைத்தார்.சத்யாவிடமிருந்த சிறுமி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செல்வியிடம் கைமாறினார். இதுபோல், பல்வேறு புரோக்கர்களிடம் விற்கப்பட்ட சிறுமி, பலவந்தமாக விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்.
மதுரை, காரைக்குடி, சிவகங்கை, கொடைக்கானல், சென்னை, திருச்சி போன்ற, பல்வேறு ஊர்களில் உள்ள, முக்கிய பிரமுகர்களுக்கு விருந்தாக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு புரோக்கரிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்டார்.இரண்டு நாட்களுக்கு முன், விபசார கும்பலிடமிருந்து தப்பிய சிறுமியை, ராமநாதபுரத்தை சேர்ந்த, தொண்டு நிறுவன ஊழியர் ரைசுதீன் காப்பாற்றி, ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
புகாரை வாங்க போலீசார் மறுத்ததால், சிறுமி பற்றி, தமிழக டி.ஜி.பி., ராமானுஜத்திடம் ரைசுதீன், போனில் தெரிவித்தார். டி.ஜி.பி., உத்தரவுப்படி, ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் நடவடிக்கை எடுத்தார். ராமநாதபுரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், சிறுமியிடம் நேற்று முன்தினம், விசாரணை நடத்திய போது, கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு நபர்களிடம் சிக்கி, கற்பழிக்கப்பட்டது பற்றி, கதறியவாறு தெரிவித்தார்.
திருமங்கலத்தைச் சேர்ந்த பூங்கோதை (ஈஸ்வரியின் தோழி) தாயார், புரோக்கர்கள் சத்யா, செல்வி, சந்திரா, கலைச்செல்வி, இவரது கணவர் சதீஷ், காரைக்குடியை சேர்ந்த புரோக்கர் ருக்மணி, தற்போது சென்னையில் வசித்து வரும், ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல், சாத்தான்குளம் சேக், ராமேஸ்வரம் இளங்கோ, புரோகிதர் ஒருவர், ராமநாதபுரம் ஆனந்தம், மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டி, புரோக்கர் ராஜேந்திரன் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பிறகு, ராமநாதபுரம் ஜே.எம்.,1 கோர்ட்டில், சிறுமியை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவுபடி, ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது.கேரளா பாணியில், தமிழகத்திலும் உள்ள விபசார நெட்வொர்க், திருமங்கலம் சிறுமி மூலம் அம்பலமாகியுள்ளது. சிறுமியிடம் நடத்தும் தொடர் விசாரணையில், மேலும், பல வி.ஐ.பி.,க்களின் பெயர் வெளிவரலாம் என, போலீசார் தெரிவித்தனர்.
மிட்டாயில் பசியாறிய கொடுமை
*ஒரு வாரத்திற்கு ஒரு ஊராக சிறுமி ஈஸ்வரி, 5,000 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விலை பேசி, கைமாற்றப்பட்டுள்ளார். இவரை விலைக்கு வாங்கும் புரோக்கர்கள், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து செல்லும் போது, சாப்பாடு கூட வாங்கித் தருவதில்லை. 10 ரூபாய்க்கு தேன் மிட்டாய் வாங்கிக் கொடுத்தே, பசியாற வைத்தனர்.
*'புது வரவு' எனக் கூறியே, வாடிக்கையாளர்களுக்கு இரண்டரை ஆண்டுகளாக ஓய்வில்லாமல் விருந்தாக்கப்பட்டார்.
*விபசார கும்பலிடம் இருந்து தப்பிய சிறுமியிடம், ஒரு பைசா கூட இல்லை. கிழிந்த உடையுடன் இருந்தவருக்கு, தொண்டு நிறுவனத்தினர் புதிய உடை வாங்கி கொடுத்தனர்.