இரவுநேர பயணத்தால் தொடரும் விபரீதம்: பஸ்- லாரி மோதல்; 8 பேர் பலி
இரவுநேர பயணத்தால் தொடரும் விபரீதம்: பஸ்- லாரி மோதல்; 8 பேர் பலி
UPDATED : பிப் 10, 2024 02:26 PM
ADDED : பிப் 10, 2024 07:24 AM

நெல்லூர்: ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே லாரி மற்றும் சுற்றுலா பஸ் மோதிய விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். சமீப காலமாக, இரவு நேர பயணத்தால் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது. இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும் என பலதரப்பினர் வலியுறுத்தியும், அலட்சியம் செய்வதால் விபரீத விபத்துக்கள் தொடர்கிறது.
சென்னை வடபழனியில் இருந்து நேற்று(பிப்.,09) நள்ளிரவு புறப்பட்ட சுற்றுலா பஸ் மீது, இன்று(பிப்.,10) அதிகாலை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு நெல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் இருந்து தப்புவதற்காக டிரைவர் லாரியை வலது புறமாக திருப்ப முயன்றபோது, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த போது சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சமீபத்தில் தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிமென்ட் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. காரில் சென்ற ஆறு பேர் உயிரிழந்தனர். அதே போல் ஊட்டி அருகே இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டது. இரவு நேர பயணத்தால் விபத்துகள் அதிகம் நடந்து வருகிறது.
இதனால் இரவு பயணத்தையும், அதிகாலை பயணத்தையும் தவிர்த்தால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பதை தொடர்ந்து நடந்து வரும் விபரீத சம்பவங்கள் உணர்த்துகிறது.