ADDED : நவ 26, 2026 09:09 PM
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மாயமான பள்ளி மாணவர் சையத் சமீர், 17, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சையத் லத்தீப், 44. இவரது மகன் சையத் சமீர். இவர், பெருநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்தார். கடந்த, 10 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. நேற்று (நவ.,25) மதியம் முதல், சையத் சமீர் திடீரென வீட்டிலிருந்து மாயமானார்.
குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றின் அருகே சையத் சமீரின் செருப்பு மட்டும் இருந்தது. அதிர்ச்சி அடைந்த சையத் லத்தீப், துாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் மற்றும் செய்யாறு தீயணைப்பு துறையினர் அங்கு சென்று, கிணற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு, 12:30 மணி அளவில் கிணற்றில் இருந்து சையத் சமீர், சடலமாக மீட்கப்பட்டார். துாசி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
