இளம்பெண்ணுக்கு சூடு போட்டு சித்ரவதை எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது வழக்கு
இளம்பெண்ணுக்கு சூடு போட்டு சித்ரவதை எம்.எல்.ஏ. மகன், மருமகள் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2024 11:10 PM

சென்னை:படிக்க வைப்பதாக ஆசை காட்டி, வீட்டு வேலைக்கு அமர்த்திய இளம்பெண்ணை, சூடு வைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக, தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன், மருமகள் மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை பல்லாவரம் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ, 35; மருமகள் மார்லினா, 31. திருவான்மியூர் சவுத் அவென்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
சம்பளம் தரவில்லை
இவர்களது வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த, பட்டியலின இளம்பெண் வேலை செய்து வந்தார். 18 வயதான அந்த பெண்ணிடம், 'பிளஸ் 2 முடித்துள்ள உன்னை டாக்டராக்கி காட்டுகிறோம். மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை என்றால், பி.பி.ஏ., படிக்க வைக்கிறோம்' என்றெல்லாம் கணவனும், மனைவியும் கூறியுள்ளனர்.
மாதச் சம்பளமாக 16,000 ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், 5,000 மட்டுமே தந்துள்ளனர். அதையும் சில மாதங்கள் தராமல் இருந்துள்ளனர். அந்த பெண்ணை அடித்து உதைத்ததுடன், அவரது உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன், சொந்த ஊருக்கு அழைத்து சென்று, வீட்டில் விட்டு வந்தனர். அப்போது, மகளின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த தாய் செல்வி, உளுந்துார் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
காயங்கள் இருப்பது குறித்து, டாக்டர்கள் சென்னை நீலாங்கரை மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீசார் விசாரித்துள்ளனர்.
அக்ரிமென்ட்
அந்த இளம்பெண் அளித்துள்ள வாக்குமூலம்:
நான் வேலைக்கு சேர்ந்த சில நாட்கள், ஆன்ட்ரோ, மார்லினா ஆகியோர் நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். என்னை நன்கு படிக்க வைப்பதாகவும் கூறினர். எனக்கு வீட்டு வேலை செய்து பழக்கம் இல்லை. இதனால், அம்மாவை தொடர்பு கொண்டு, சொந்த ஊருக்கு வந்து விடுவதாக கூறினேன்; அவரும் வரச்சொல்லி விட்டார்.
ஆனால் மார்லினா, 'நீ தங்கி விட்டு போக, இது என்ன சத்திரமா? உன்னை ஆறு மாதம் அக்ரிமென்ட் போட்டுள்ளோம்' என, மிரட்டினார்.
என் மொபைல் போனை பிடுங்கிக் கொண்டனர். 'எனக்கு வேலை செய்ய பிடிக்கவில்லை; வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்' என்று, கெஞ்சினேன்.
அப்போது, மார்லினா, 'நான் யார் தெரியுமா, எம்.எல்.ஏ., மருமகள்... நான் நினைத்தால், உன் அம்மாவை உள்ளே துாக்கி வைத்து விடுவேன்' என்றும் மிரட்டினார்.
எனக்கு பயமாக இருந்ததால், தொடர்ந்து அங்கேயே வேலை செய்தேன். துவக்கத்தில் வீடு துடைத்தால் போதும் என்றனர். பின், மூன்று நேரமும் சமைக்க வைத்தனர். அவர்கள் சாப்பிட்ட மீதிதான் எனக்கு அன்றாட உணவு.
பின், ஒரு மூட்டை ரேஷன் அரிசி வாங்கி கொடுத்து, தனியாக சமைத்து சாப்பிடும்படி கூறினர். அதற்கு குக்கரை பயன்படுத்தியதற்கு, மாலினா தோசை கரண்டியால் அடித்தார்.
ஒருமுறை மார்லினா பயன்படுத்திய, 'ஹேர் ஸ்ட்ரெய்ட்னர்' கருவியை எடுத்து வைக்கும்படி சொன்னார். சூடாக இருப்பதாக நான் பதில் சொன்னதும், கோபாவேசத்துடன் வந்த மார்லினா, 'இதுவா சூடா இருக்கு' என, என் உள்ளங்கையில் வைத்து விட்டார்; வெந்து கொப்பளமாகி விட்டது.
தோசை கல்லில் கை பட்டு விட்டதாக பொய் சொல்லி சமாளித்தனர். எதற்கெடுத்தாலும் குறை சொல்லி மார்லினா அடிப்பார்; என் முடியை கத்தரித்ததுடன், கீழே தள்ளி செருப்பு காலால் எட்டி உதைத்துள்ளார்.
அடித்தார்
ஒரு முறை, குழந்தை முன் என்னை அடித்தார். அப்போது ஆன்ட்ரோ ஓடி வந்து, 'இவளை என்ன வேண்டுமானாலும் செய். குழந்தை முன் அடிக்காதே. அதன் மனதில் பதிந்து விடும்' என, திட்டினார்.
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கு நான் தான் காரணம் என்று கூறி, மார்லினா என் உடலில் சூடு போட்டார். ஆன்ட்ரோ கூட என்னை இரண்டு முறை அடித்துள்ளார். அவர்கள் வீட்டில், நான் அடி வாங்காத நாளே இல்லை. ஜாதி பெயரையும் சொல்லி திட்டுவர்.
இவ்வாறு அப்பெண் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், நீலாங்கரை மகளிர் போலீசார், ஆன்ட்ரோ மற்றும் மார்லினா ஆகியோர் மீது, கடுமையான ஆயுதங்களால் தாக்குதல், எஸ்.சி. - எஸ்.டி. வன்கொடுமை உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துஉள்ளனர்.