ADDED : ஜூன் 24, 2026 04:56 AM

சென்னை: 'தமிழகத்தில், மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில், 17 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகை பகுதியில், 8; புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர், 6; புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், திருவள்ளூர் மாவட்டம் கூனிபாளையம் ஆகிய இடங்களில், தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில், இன்று இடி, மின்னல் மற்றும் பலத்தக் காற்றுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு உட்பட வட மாவட்டங்களில், நாளை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில், இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
