ADDED : ஆக 05, 2026 04:25 AM

சென்னை : 'தமிழகத்தில், ஒன்பது மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தில், நேற்றுமுன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் கொடவாசலில், 6.9 செ.மீ., மழை பெய்தது.
தற்போது, தெற்கு கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், 5.8 கி.மீ., உயரத்தில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வட தமிழக கடலோரப் பகுதிகள், கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
அதனால், இன்று, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை, நாளை மறுநாள், தேனி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மற்ற மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
