சென்னை:'தமிழகத்தில் ஒரு சில இடங்களில், 15ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
எனவே, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யலாம். இது, 15ம் தேதி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும், அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
6 இடங்களில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.6 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, கரூர் பரமத்தியில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40 டிகிரி செல்ஷியசுக்கு மேலும், சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலும் வெப்பம் பதிவானது.