ஏற்காடு, ராமநாதபுரத்தில் நவீன ரேடார்கள்; துல்லியமாக மழை விபரம் அறிய முயற்சி
ஏற்காடு, ராமநாதபுரத்தில் நவீன ரேடார்கள்; துல்லியமாக மழை விபரம் அறிய முயற்சி
ADDED : அக் 21, 2024 04:14 AM

சென்னை : புயல், மழை பாதிப்புகளை துல்லியமாக கணிக்க, ஏற்காடு மற்றும் ராமநாதபுரத்தில், நவீன ரேடார்கள் அமைக்கும் பணியை, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் துவக்கியுள்ளது.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக, பேரிடர் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. புயல், மழை பாதிப்புகளை துல்லியமாக அறிவதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
மேக வெடிப்பு
தற்போதைய நிலவரப்படி, நாடு முழுதும் இந்திய வானிலை துறை தான் ரேடார்கள் வாயிலாக, வானிலை நிலவரங்களை அறிந்து, முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுகிறது.
தமிழகத்தில் சென்னை, காரைக்கால் என, இரு இடங்களில் மட்டுமே, இந்திய வானிலை துறையின் ரேடார்கள் உள்ளன. இவற்றின் வழியே புயல், காற்றின் வேகம், மழை குறித்த துல்லிய தகவல்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், தமிழக தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் பருவ மழை காலத்தில், மேக வெடிப்பு போன்ற காரணங்களால், குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்ட வாய்ப்புள்ள விபரங்களை அறிய முடியவில்லை.
இதையடுத்து, இரண்டு இடங்களில் வானிலை தகவல்களுக்கான ரேடார்களை அமைக்க, தமிழக அரசு முன்வந்துள்ளது. கடந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. தற்போது, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம், இதற்கான முயற்சியை மேற்கொண்டு உள்ளது.
இதுகுறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்திய வானிலை துறையின், சென்னை மண்டல அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசித்து, இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டம், ஏற்காடு, ராமநாதபுரம் என, இரு இடங்களில், நவீன, 'சி பேண்ட் டாப்ளர் ரேடார்கள்' 56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன.
புதிய வசதி
இதற்கான டெண்டர் பணிகள் ஆகஸ்டில் துவங்கின. நிறுவனங்கள் தேர்வு பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன; ஓரிரு மாதங்களில் இப்பணி முடிந்து விடும்.
தமிழக அரசின் துறைகள் மட்டுமின்றி, வானிலை துறையும், இதன் தகவல்களை பெறும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வசதிகளை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்த, இந்திய வானிலை துறையுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.