ADDED : நவ 08, 2025 01:01 AM

சென்னை: ''அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விரும்புகின்றனர்,'' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
'ராமநாதபுரம் எம்.பி., நாவஸ்கனியின், தேர்தல் வெற்றி செல்லாது' என அறிவிக்க கோரி, தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
ஜெயலலிதா என்ன உத்தரவிட்டாரோ, அதைத்தான் செய்திருக்கிறேன். ஆனால், 14 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் குறித்து, ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ பேசி, என்னை குறை கூறி உள்ளார்.
அவர் மீது மரியாதை உண்டு. அதனால், நாகரிகம் கருதி, இப்போதைக்கு பல விஷயங்களை பேசாமல் இருக்கிறேன். அவர் விரும்பினால், அனைத்துக்கும் பதில் அளிக்க தயார்.
அ.தி.மு.க.,வின் மூத்த முன்னோடி என்றால், செங்கோட்டையன் தான். தொண்டர்கள் உரிமைக்காக நானும் அவரும் பாடுபட்டு வருகிறோம்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பா.ஜ.,வின் மேல்மட்ட தலைவர்களும், அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், தனிப்பட்ட நபரின் விருப்பு, வெறுப்பு, அ.தி.மு.க., ஒன்றுபட தடையாக உள்ளது.
அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை, அடிப்படை தொண்டர்களின் ஓட்டுரிமையின் வழியே தான் தேர்வு செய்ய வேண்டும். இது தான் கட்சி விதி. இதை மாற்றியுள்ளனர்.
எம்.ஜி.ஆர்., தொண்டர்களுக்கு தந்த உரிமையை பறித்துள்ளனர். அந்த உரிமையை மீட்கும் குழுவாக நாங்கள் செயல்படுகிறோம். வைத்திலிங்கம் எந்த காலத்திலும், எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.

