'ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது மோடி அரசு!'
'ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது மோடி அரசு!'
UPDATED : ஜன 07, 2024 04:40 AM
ADDED : ஜன 07, 2024 02:40 AM

சென்னை:கடந்த ஒன்பது ஆண்டு கால மத்திய பா.ஜ., ஆட்சியில், 100 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன், அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து விடும்' என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது, 2014 மார்ச் 31ல், இந்தியாவின் மொத்த கடன், 58.6௦ லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ஆனால், 2023 மார்ச் 31ல், நாட்டின் மொத்த கடன், 153 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் 31ல் மொத்த கடன், 169 லட்சம் கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டின் கடன் 100 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது தான் மத்திய பா.ஜ., அரசின் பெரும் சாதனை.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் நிர்வாக திறமையின்மையே, இதற்கு முழுமுதல் காரணம். தமிழகத்தின் கடன் பற்றி பேசும் அண்ணாமலை, மத்திய பா.ஜ., அரசின் கடன் பற்றி, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பின், அது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய பா.ஜ., அரசு, உத்தர பிரதேசம், குஜராத் போன்ற பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கி வருகிறது.
'தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு 1 ரூபாய் கிடைத்தால், அதில், 29 காசு தான் திருப்பி அளிக்கப்படுகிறது' என, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.
இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், நிர்மலா சீதாராமன் விதண்டாவாதம் பேசி வருகிறார்.
இவ்வாறு அழகிரி கூறியுள்ளார்.