ADDED : ஜன 30, 2024 12:10 AM

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், 96 லட்சம் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா, 5 கிலோ அரிசியும், 18.65 லட்சம் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு தலா, 35 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த அரிசியை மத்திய அரசு, இந்திய உணவு கழகம் வாயிலாக, தமிழகத்திற்கு இலவசமாகவழங்குகிறது.
அதன்படி மாதம், முன்னுரிமை பிரிவுக்கு, 1.42 லட்சம் டன் அரிசியும்; அந்தியோதயா பிரிவுக்கு, 62,650 டன் அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. 1 கிலோ அரிசி விலை சராசரியாக, 39.20 ரூபாயாக உள்ளது.
அரிசி மட்டுமின்றி, இரு பிரிவு கார்டுதாரர்களுக்கும் இலவசமாக வழங்க, மாதம் 8,500 டன் கோதுமையும்தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
இலவச அரிசி திட்டம், இம்மாதம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
விரைவில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.
எனவே, இலவச அரிசி திட்டத்தைமக்களிடம் விளம்பரப்படுத்தும் வகையில், நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளில்,பிரதமர் உருவபடத்துடன் கூடிய, 'செல்பி பாயின்ட்' ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
எனவே, தமிழகத்திலும் 1,500 ரேஷன் கடைகளில் பிரதமரின் செல்பி பாயின்ட் அமைக்க, அந்த கடைகளை அடையாளம் கண்டு தகவல் அளிக்குமாறு, தமிழக கூட்டுறவு மற்றும் உணவு துறைக்கு, மத்திய உணவு துறை உத்தரவிட்டுள்ளது.