சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி
சென்னை - நாகர்கோவில் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் மோடி
ADDED : ஆக 28, 2024 03:52 AM

சென்னை : சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி வரும் 31ம் தேதி துவங்கி வைக்கிறார்.
சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், தெற்கு ரயில்வே முதன்மை தலைமை பணியாளர் நலன் அதிகாரி ஹரி கிருஷ்ணன், முதன்மை நிதி ஆலோசகர் மாலாபிகா கோஷ் மோகன் கூறியதாவது:
சென்னை - - நாகர்கோவில் இடையேயும், மதுரை -- பெங்களூரு இடையேயும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி விரைவில் துவங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்கெல்லாம் நிற்கும்
பெங்களூரில் வரும் 31ம் தேதி நடக்கும் விழாவில், காணொளி வாயிலாக வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் துவங்கி வைக்க உள்ளார். எழும்பூரில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:50க்கு நாகர்கோவிலுக்கு செல்லும்.
நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20க்கு புறப்பட்டு இரவு 11:00 மணிக்கு எழும்பூர் வரும்.இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும்.
மதுரையில் இருந்து காலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:00க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்லும்.
பெங்களூரு கன்டோன்மென்டில் இருந்து மதியம் 1:30க்கு புறப்படும் ரயில், இரவு 9:45க்கு மதுரை சென்றடையும். இந்த ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும்.