இது உங்கள் இடம்: பணம் வாங்குபவர்கள் சிந்திக்க வேண்டும்!
இது உங்கள் இடம்: பணம் வாங்குபவர்கள் சிந்திக்க வேண்டும்!
ADDED : ஜன 18, 2024 06:44 AM

கி.முத்துகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:'
அயோத்தி ராமர் கோவில் திறப்பை, பா.ஜ.,வின் திருவிழாவாக மாற்ற நினைப்பதா' என்று, தி.மு.க., - எம்.பி., டி.ஆர்.பாலு குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'இறை நம்பிக்கை ஒவ்வொரு மனிதரின் விருப்பமும், உரிமையும் ஆகும். ஒருவரது பக்தியை அரசியலுக்கான முதலீடாக மாற்றுவது ஜனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல... ஆன்மிக அறங்களுக்கே எதிரானதும் ஆகும்.
'கோவில் கட்டுவதையும், திறப்பதையும் தன் கட்சியின் சாதனையாக காட்டி, மக்களை ஏமாற்ற பா.ஜ., அரசும், பிரதமர் மோடியும் நினைப்பது ஏற்கத்தக்கதல்ல' என்றும் கூறியுள்ளார். இவர் ஏன் இப்படி கொதிக்கிறார், குமுறுகிறார்?
இறை நம்பிக்கை, ஒவ்வொரு மனிதரின் விருப்பமும், உரிமையும் ஆகும் என்று 'யாருக்குமே தெரியாத' ஒரு உண்மையை தெரிவித்துள்ளார்.
சரி...
மத்திய அரசு வெள்ள நிவாரண உதவித் தொகைக்காக அனுப்பும் பணத்தை, நேரடியாக பயன்பாட்டாளர் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், அந்த பணத்தை ஒரு கவரில் போட்டு, அந்த கவரின் மேல் ஸ்டாலின் படத்தையும் போட்டு, ஏன் வினியோகிக்க வேண்டும்?
'மக்களுக்கு நன்மை செய்வதன் வாயிலாக அல்லாமல், மக்களை ஏமாற்றுவதன் வாயிலாக வெல்ல முடியுமா என்று பா.ஜ., கட்சி பார்க்கிறது' என்று சொல்லும் பாலு, மேற்படி வெள்ள நிவாரண உதவித்தொகை விஷயத்தில் எதை நினைத்து இப்படி செய்கின்றனர்?
'மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரண தொகை வரும்; அதை முதல்வர் படம் போட்ட கவரில் கொடுக்க வேண்டும்' என்று, வருமுன் யோசித்து, கவரை முன்னதாகவே அச்சிட்டு வைக்கும் தமிழக அரசு, இதேபோல் சென்னை வெள்ளத்தில் மூழ்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஒரு முறையாவது வருமுன் யோசித்துள்ளதா?
ஒரு பேச்சுக்கு ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதத்தினர், 'தி.மு.க.,விற்கு எங்கள் ஓட்டு கிடையாது' என்று, சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஒரு தி.மு.க.,காரராவது ரம்ஜானுக்கு கஞ்சியோ, கிறிஸ்துமசுக்கு கேக்கோ சாப்பிடுவாரா?
பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள், இது குறித்து சிந்திக்க வேண்டும்!