sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

/

சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

சி.பி.ஐ., போல நடித்து பணம் மோசடி 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

4


ADDED : மார் 09, 2024 01:15 AM

Google News

ADDED : மார் 09, 2024 01:15 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பார்சலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளீர்கள் என, மிரட்டல் விடுத்து பண மோசடி செய்யும் போலி சி.பி.ஐ., அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, மாநில 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சய் குமார் எச்சரிக்கை செய்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும் சைபர் கிரைம் குற்றவாளிகள், பொதுமக்களின் மொபைல் போனுக்கு, 'பெட்எக்ஸ்' (fedEx) எனப்படும் சரக்கு போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களில் இருந்து அனுப்புவது போல, 'உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட மர்ம பார்சல் திரும்ப வந்து விட்டது. உடனே தொடர்பு கொள்ளவும்' என, குறுஞ்செய்தி அனுப்புகின்றனர்.

தொடர்பு கொண்டால், 'நாங்கள் பெட் எக்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுகிறோம். உங்கள் பெயரில் அனுப்பப்பட்ட மர்ம பார்சல் எங்களிடம் உள்ளது.

'அதில், சட்ட விரோதமாக பெறப்பட்ட பாஸ்போர்ட்டுகள், கிரெடிட் கார்டுகள், சிம்கார்டுகள் மற்றும் போதைப்பொருட்கள் இருப்பதை, மும்பை போலீசார் கண்டறிந்துள்ளனர்' என, மிரட்டுகின்றனர்.

'வாட்ஸாப்' எண்

அதை மறுத்தால், தொடர்பு கொண்ட நபரின், 'வாட்ஸாப்' எண்ணிற்கு, ஆதார் எண், பான்கார்டு உள்ளிட்ட விபரங்களை அனுப்புகின்றனர். இதனால், பொதுமக்கள் மிரண்டு போய், 'நாங்கள் எந்த பார்சலையும் அனுப்பவில்லை' என, கூறினாலும், பெடெக்ஸ் நிறுவன போலி நபர் விடுவதாக இல்லை.

'தொடர்பை துண்டித்து விடாதீர்கள். மும்பை சைபர் கிரைம் போலீசாருக்கு இணைப்பு தருகிறோம்' என, கூறுகின்றனர். பின், எதிர்முனையில் பேசுபவர், தன்னை போலீஸ்காரர் என, அறிமுகம் செய்து கொள்கிறார்.

சில விபரங்களைக் கேட்ட பின், தொடர்பை தன் உயர் அதிகாரிக்கு இணைப்பதாகக் கூறுகிறார்.

அந்த உயர் அதிகாரி தொடர்பு கொண்ட நபரின் ஆதார் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை தெரிவித்து, 'நீங்கள் தான் பார்சலில் போதைப்பொருள் கடத்தி உள்ளீர்கள். உங்கள் அடையாளச் சான்றுகளை பயன்படுத்தி தான் இந்த பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது.

'உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளது. உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்' என, மிரட்டுகின்றனர்.

தொடர்பை மும்பை சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு இணைப்பதாகக் கூறுகின்றனர். எதிர்முனையில் பேசுபவர் மிரட்டுவது இல்லை.

மாறாக, 'உங்கள் ஆதார் எண் உள்ளிட்ட அடையாள சான்றுகளை தவறாக பயன்படுத்தி மர்ம நபர்கள் போதைப்பொருள் கடத்தி உள்ளனர். நீங்கள் பயப்பட வேண்டாம். நாங்கள் சொல்வதை செய்தால் போதும்' என, கூறுகின்றனர்.

நெருங்கிய தொடர்பு

இதை உண்மை என, பொதுமக்களும் நம்பி விடுகின்றனர். இவர்களுடன் பேசிய போலி சி.பி.ஐ., அதிகாரி, 'போதைப்பொருள் கடத்தப்பட்டதை இப்படியே விட்டுவிட முடியாது. வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்போது தான், உங்களுக்கு பிரச்னை வராது' என, கூறுகின்றனர்.

அந்த நபர் வழக்குப்பதிவு செய்ய, 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொள்கிறார். அப்போது முகத்தை காட்டுவது இல்லை. இது பற்றி கேட்டால், 'நாங்கள் சி.பி.ஐ., அதிகாரிகள். ரகசியம் கருதி முகத்தை காட்டக் கூடாது' என, தெரிவிக்கிறார்.

இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போதே, 'எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு விட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, உங்கள் கூட்டாளி ஒருவரை கைது செய்துள்ளோம். அவரின் படம் மற்றும் எப்.ஐ..ஆர்., காப்பியை அனுப்பி வைக்கிறோம்' என கூறுகின்றனர்.

அதன்படி வாட்ஸாப் எண்ணிற்கு அனுப்பி, 'அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். போதைப்பொருள் கடத்தலில் உங்களுக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

'நீங்கள் உடனடியாக மும்பைக்கு வர வேண்டும். மறுத்தால், விடிவதற்குள் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்' என, மிரட்டுகின்றனர்.

'போதைப்பொருள் கடத்தலுக்கு உங்கள் வங்கி கணக்கில் இருந்து தான் பணம் அனுப்பப்பட்டு உள்ளது.

'கைது நடவடிக்கையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் உங்கள் வங்கி கணக்குளை ஆய்வு செய்வர்' என, கூறுவர்.

இதற்காக ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு இணைப்பை பார்வேர்டு செய்வதாகக் கூறுவர். அதன்படி, ரிசர்வ் வங்கி அதிகாரி போல மர்ம நபர் ஒருவர் பேசுவார்.

'நாங்கள் தெரிவிக்கும் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி வையுங்கள். ஆய்வு செய்தபின், பணம் திரும்ப அனுப்பப்படும். இதற்கு சம்மதம் இல்லையென்றால் சி.பி.ஐ., அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வருவர்' என, கூறுகின்றனர்.

வழக்குகள் பதிவு

பயந்து பணம் அனுப்பினால், அதை எடுத்துக் கொண்டு, தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.

சமீபத்தில் இத்தகைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக, இரண்டு மாதங்களில், 390 வழக்குகள் பதிவாகி உள்ளன.

செய்யாத குற்றத்திற்காக நீங்கள் ஏன் பணத்தை இழக்க வேண்டும்? பார்சலில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளீர்கள் மிரட்டல் வந்தாலோ அல்லது உங்கள் மொபைல் போனுக்கு வரும் குறுஞ்செய்திகள் மீது சந்தேகம் எழுந்தாலோ அருகில் உள்ள, காவல் நிலையம் சென்று புகார் அளியுங்கள்.

சைபர் கிரைம் குற்றவாளிகள் உங்களை பயமுறுத்தி பணத்தை பறிக்கின்றனர். அவர்கள் குறித்து துப்பு துலக்கி வருகிறோம். இத்தகைய மோசடிகள் குறித்து, உடனடியாக, கட்டணமில்லா, 1930 என்ற எண்ணிற்கும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யுங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us