ஓய்வூதியர்களை குறி வைத்து பண மோசடி: 28 புகார்கள் பதிவு
ஓய்வூதியர்களை குறி வைத்து பண மோசடி: 28 புகார்கள் பதிவு
ADDED : அக் 26, 2024 03:39 AM
சென்னை : இணையவழி குற்றவாளிகள் ஓய்வூதியதாரர்களை குறிவைத்து பணமோசடி செய்தது தொடர்பாக, மாநிலம் முழுதும், 28 புகார்கள் பதிவாகி உள்ளன.
'ஆன்லைன்' வாயிலாக பணமோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், தற்போது ஓய்வூதியதாரர்களை குறிவைக்கத் துவங்கி உள்ளனர்.
ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதிய அலுவலக அதிகாரிகள் போல தொடர்பு கொள்வர். மூத்த குடிமக்களை மொபைல் போன் எண்கள் மற்றும் வாட்ஸாப் வாயிலாக தொடர்பு கொள்ளும் அவர்கள், மாற்றுத்திறனாளி, வயது முதிர்ந்தோர், விதவை ஓய்வூதிய திட்டங்களில் பயனாளிகளாக சேர்த்திருப்பது போல பேசுவர்.
பணம் அனுப்ப வேண்டும் என மூளைச்சலவை செய்து, பண இருப்பு விபரம், வங்கி கணக்குகள் தொடர்பான முக்கிய தகவல்களை பெறுவர்.
இந்த தகவல்களை வாட்ஸாப் வாயிலாக, 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்தும் அனுப்பச் சொல்வர்.
மூத்த குடிமக்களை சற்றும் யோசிக்க விடாமல், தொடர்ந்து பேசி ஆசை காட்டுவர். ஓ.டி.பி., எண் உள்ளிட்ட விபரங்களை பெற்று, பண மோசடியில் ஈடுபடுவர்.
இதுகுறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறுகையில், “தமிழகத்தில், ஓய்வூதியதாரர்களிடம் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்தது தொடர்பாக, ஜன., முதல் அக்., வரை, 28 புகார்கள் பதிவாகி உள்ளன.
“இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். சைபர் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்,” என்றார்.