ADDED : ஏப் 02, 2025 02:01 AM
மத்திய அரசு சார்பில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 2005ம் ஆண்டு முதல் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் நடக்கும், 100 நாள் வேலை உறுதி திட்டப் பணிகள் அனைத்தும், 'ட்ரோன்' வாயிலாக கண்காணிக்கப்படும் என, ஊரக வளர்ச்சி துறை அறிவித்து உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பணிகளை கண்காணிக்க, 'ட்ரோன்' பயன்படுத்த, மத்திய அரசு, 2023 - 24ம் நிதியாண்டில் அறிவுறுத்தியது. செங்கல்பட்டு, திருவள்ளூர், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 'ட்ரோன்' வழியே பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.
வரும் ஆண்டில், அனைத்து மாவட்டங்களுக்கும், 'ட்ரோன்' கண்காணிப்பு விரிவுப்படுத்தப்படும். மேலும், புவியியல் தகவல் அமைப்பு வாயிலாக, 388 கிராம ஊராட்சிகளில் நடக்கும் பணிகள் குறித்த விபரங்கள், மத்திய அரசுக்கு தெரியப்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு குறைத்துள்ளதால், தமிழகத்திற்கான நிதி விடுவிக்கப்படாமல் உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் நிதி விடுவிக்கப்படவில்லை. முறைகேடு காரணமாக நிதி விடுவிக்கவில்லை என்று கூறுவது தவறானது. மத்திய அரசு விரைவில் நிதியை விடுவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

