பருவமழை கட்டுப்பாட்டு மையம் நீர்வளத் துறையினர் சுணக்கம்
பருவமழை கட்டுப்பாட்டு மையம் நீர்வளத் துறையினர் சுணக்கம்
UPDATED : அக் 17, 2026 12:00 AM
ADDED : அக் 16, 2026 08:24 PM
சென்னை: வடகிழக்கு பருவமழை கட்டுப்பாட்டு மையம் அமைக்காமல், நீர்வளத்துறையினர் அமைதி காத்து வருகின்றனர்.
நீர்வளத்துறை வாயிலாக, 90 அணைகள், 14 ஆயிரத்து 400 ஏரிகள், பல ஆயிரம் கி.மீ., கால்வாய்கள் பராமரிக்கப்படுகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்ட நீர்நிலைகளுக்கு, தென்மேற்கு பருவமழை வாயிலாக அதிகளவு நீர்வரத்து கிடைக்கும்.
கட்டுபாட்டு அறை
வடமாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு, வடகிழக்கு பருவமழை வாயிலாக, பரவலாக நீராதாரம் கிடைக்கும்.
வடகிழக்கு பருவ மழையால் உருவாகும் புயல்களால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும்; தென் மாவட்டங்களிலும் இதன் தாக்கம் இருக்கும்.
நடப்பாண்டு, ‘எல் நினோ’ பாதிப்பு காரணமாக, பல மாவட்டங்களில் மழை கொட்டும் என்றும், சில மாவட்டங்களில் வறட்சி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை துவங்கும் நேரத்தில், நீர்வளத்துறை வாயிலாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில், 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு மையம் திறக்கப்படும். அனைத்து மாவட்ட தலைமை அலுவலகங்களிலும், இதேபோன்று கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படும்.
மூன்று, ‘ஷிப்ட்’ அடிப்படையில், இங்கு பொறியாளர்கள், அலுவலர்கள் பணியில் இருப்பர். மழை, நீர்வரத்து, அணைகள், ஏரிகளில் நீர் திறப்பு, கரை உடைப்பு, வெள்ளம் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தலைமை அலுவலகத்திற்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.
இத்தகவல், முதல்வர், அமைச்சர்கள், துறை செயலர்கள் உள்ளிட்டோருக்கு அறிக்கையாக அனுப்பப்படும்.
சுணக்கம்
நடப்பாண்டு வட கிழக்கு பருவ மழை கட்டுப்பாட்டு மையங்களை, நீர்வளத்துறை முறையாக அமைக்கவில்லை. கட்டுப்பாட்டு மையத்தில், 24 மணி நேரம் பணியில் இருக்கும் பொறியாளர்கள், அலுவலர்கள் குறித்த விபரங்களும் தலைமை அலுவலகத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை.
பருவமழை துவங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணியில், எப்போதும் இல்லாத அளவிற்கு நீர்வளத் துறையினர் சுணக்கம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
