ADDED : செப் 13, 2011 02:22 AM
மதுரை : மதுரையில் தனியாக இருந்த பெண் மற்றும் அவரது ஆறு வயது மகன் மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.
நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மதுரை காமராஜர் சாலை நவரத்தினபுரம் 2 வது தெருவை சேர்ந்த டெய்லர் விஜயகுமார். கான்பாளையத்தில் டெய்லரிங் கடை நடத்தி வருகிறார். மூத்த சகோதரர் ஜெயக்குமார். டூவீலர் மெக்கானிக். இவர் வீட்டின் கீழ் தளத்தில் வசிக்கிறார். முதல் மாடியில் விஜயகுமார் குடும்பத்துடன் வசித்து வந்தார். மனைவி துர்க்காதேவி, 32, மகன் ஸ்ரீராம் , 6. இவர் கே.கே.நகரில் ஒரு பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார். விஜயகுமாரின் தாய் வசந்தா, 63, இரவு 10 மணிக்கு அங்கு சாப்பிடச் சென்றபோது துர்காதேவி, ஸ்ரீராம் கழுத்தறுபட்டு பிணமாக கிடந்ததை கண்டார். வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. துர்காதேவி அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல்களை காணவில்லை. பீரோவில் 1 லட்சம் ரூபாய், 50 பவுன் நகை இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் அல்லது முன்விரோதத்தில் உறவினர்கள் கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.