ADDED : ஜன 22, 2024 06:46 AM
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீளமேடு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், 25, ஆட்டோ டிரைவரின் மனைவி சரண்யா, 21. இவர்களுக்கு தமிழ்யாழினி, 3, சஜித், 1, என இரு குழந்தைகள் இருந்தனர். தேவேந்திரனுக்கும், சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால், கணவருடன் கோபித்து, கடந்த 15ம் தேதி காலை தன் இரு குழந்தைகளுடன் தாய் வீடான வடதொரசலுார் வந்தார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர், அன்று மாலை அதே பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள விவசாய கிணற்றில் தன் குழந்தைகளை வீசி கொலை செய்தார்.
பின் அவரும், தற்கொலை செய்வதற்காக மரத்தின் மீது ஏறி விழுந்ததில் மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து சென்ற தியாகதுருகம் போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் இறந்து கிடந்த 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். மயங்கிக் கிடந்த சரண்யாவை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., சலீம் கொடுத்த புகாரின் படி, இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாக சரண்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரை, நேற்று கைது செய்து, வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.