பெட்ரோல் ஊற்றி எரித்து மாமியார் கொலை மருமகள், கள்ளக்காதலன் கைது
பெட்ரோல் ஊற்றி எரித்து மாமியார் கொலை மருமகள், கள்ளக்காதலன் கைது
ADDED : நவ 17, 2024 06:36 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே, மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த மருமகளை, அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த என்.ஆர்.பாளையம் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன், 43; இவரது மனைவி ராணி, 38; இவர்களுக்கு கருணாமூர்த்தி 22; தட்சணாமூர்த்தி, 20; ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கருணாமூர்த்தி கடலுார் பெரியார் அரசு கல்லுாரியில் பி.ஏ., படித்து வந்தார். அப்போது அவரும், அதே கல்லுாரியில் பி.எஸ்சி., படித்து வந்த, பண்ருட்டி அடுத்த பாலுார் காலனியைச் சேரந்த சங்கர் மகள் சுவேதாவும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜூலை மாதம் 12ம் தேதி, திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின் கருணாமூர்த்தி செங்கல்பட்டில் தங்கி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது தந்தை பாண்டியனும் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார். தட்சணாமூர்த்தி உறவினர் வீட்டில் தங்கி கடலுார் கல்லுாரியில் படித்து வந்தார்.
என்.ஆர்.பாளையத்தில் உள்ள வீட்டில் மாமியார் ரமணியும், மருமகள் சுவேதா மட்டும் வசித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி, தீபாவளிக்கு முதல் நாள் இரவு 10:00 மணிக்கு ரமணி மர்மமான முறையில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி 31ம் தேதி இறந்தார்.
தனது தாய் ரமணி சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது இளைய மகன் தட்சணாமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்தனர். சுவேதாவின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சுவேதா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து சுவேதா, 22; எதிர் வீட்டை சேர்ந்த கள்ளக்காதலன் சதீஷ்குமார், 27; ஆகிய இருவரையும் நேற்று மாலை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சுவேதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் விபரம்:
நான் பி.எஸ்சி., பி.எட்., முடித்துள்ளேன். கல்லுாரியில் படிக்கும்போதே சில ஆண் நண்பர்களுடன் தவறான பழக்கம் இருந்தது. திருமணத்திற்கு பின், கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எதிர் வீட்டில் வசிக்கும் சுந்தர்ராஜன் மகன் டிரைவர் சதீஷ்குமாருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட் டது. மாமியார் ரமணி கூலி வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். சில நேரங்களில் இரவு வெளியூரில் தங்கி வேலை செய்வார்.
இந்த சமயங்களில் நானும் சதீஷ்குமாரும் உல்லாசமாக இருந்து வந்தோம். சம்பவத்திற்கு சில நாட்கள் முன்னதாக வீட்டில் நாங்கள் உல்லாசமாக இருந்ததை மாமியார் ரமணி நேரில் பார்த்து விட்டார்.
என்னிடம் கடுமையாக பேசி, தீபாவளிக்கு ஊருக்கு வரும் எனது கணவரிடம் தெரிவிப்பதாக கூறினார். அதை நான், சதீஷ்குமாரிடம் கூறினேன்.
அவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விடுவோம் என்றார். பெட்ரோல் வாங்க கடந்த 30ம் தேதி 500 ரூபாய் கொடுத்தார். அந்த பணத்தின் மூலம் 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி வீட்டில் மறைத்து வைத்தேன்.
அன்று மாலை மாமியார் ரமணியிடம் நைசாக பேசி பாக்கம் கூட்ரோடு சென்று தீபாவளிக்கு டிரஸ் எடுத்துக் கொண்டு, ஓட்டலில் பிரைடு ரைஸ் வங்கிக் கொண்டு இரவு 8:00 மணிக்கு வீடு திரும்பினோம்.
துாக்க மாத்திரைகளை பவுடராக்கி பிரைடு ரைசில் கலந்து மாமியாருக்கு கொடுத்தேன். சிறிது நேரத்தில் அவர் துாங்கி விட்டார். இரவு 10:.00 மணிக்கு சதீஷ்குமார் வீட்டிற்கு வந்தார். 2 லிட்டர் பெட்ரோலை ஒரு பிளாஸ்டிக் மக்கில் ஊற்றி மாமியார் ரமணியின் உடல் முழுவதும் ஊற்றினார். நான் தீ வைத்தேன். உடனடியாக சதீஷ்குமாரை அங்கிருந்து அனுப்பி விட்டேன். ஊர் மக்கள் திரண்டு வந்து மாமியாரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சதீஷ்குமாரும் உதவி செய்வதுபோல் உடன் சென்றார். நடந்த சம்பவம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக்கூறி நாடகமாடினேன்.
இவ்வாறு சுவேதா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
திருமணமான 3 மாதங்களில் கள்ளத்தொடர்பால் மாமியாரை, மருமகள் தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.