எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: கவர்னர் ஒப்புதல் தரவில்லை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு: கவர்னர் ஒப்புதல் தரவில்லை
UPDATED : ஆக 30, 2024 05:20 PM
ADDED : ஆக 30, 2024 03:41 PM

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நடத்துவதற்கு கவர்னர் இதுவரை அனுமதிதரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதவி வகித்த போது, ஜிபிஎஸ் கருவிகள் வாங்குவதில் ஊழல் முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்தும் லஞ்ச ஒழிப்புத்துறை, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
மேலும் அவர் தொடர்புடைய சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்புதல் கோரி கவர்னர் ரவிக்கு கடந்த ஆண்டு மே 15ம் தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. இது அவரின் பரிசீலனையில் உள்ளது.
இந்நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்தார். அப்போது, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசுதரப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பாக தமிழக அரசு அளித்த விளக்கம்: சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்க , கவர்னரின் ஒப்புதலை கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கோரப்பட்டது. ஆனால், கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை துவங்கும் என்றார்.