ADDED : பிப் 22, 2024 02:25 AM

சென்னை:''கல்வியை தெளிவுடன் கற்க தாய்மொழி அவசியம்; வாழ்விற்கு தேவையான திறன்களை கற்க பன்மொழி அவசியம்,'' என, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் என்.ஆனந்தவள்ளி தெரிவித்தார்.
சர்வதேச தாய்மொழி தின விழா, சென்னை, தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., என்ற, கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய அரங்கத்தில், நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவில், கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆனந்தவள்ளி பேசியதாவது:
மொழி என்பது, எண்ணங்கள், உணர்வை உணர்ச்சியுடன் வெளிப்படுத்த பயன்படுகிறது. சொல்லக்கூடிய விஷயங்களை தயக்கமின்றி தாய்மொழியில் சொல்ல முடியும். அதை உறுதிப்படுத்தவே, தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது. எல்லா மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு, தாய்மொழி அவசியம்.
தாய்மொழியில்தான் கல்வியை தெளிவோடு கற்க முடியும். நாம் தினசரி வாழ்வில் அதிக மொழிகளை பேசுகிறோம். கம்யூட்டரை, தமிழில் கணினி என்கிறோம். புராச சரை, புராசசர் என்றுதான்சொல்கிறோம்.
எனவே, வாழ்விற்கு தேவையான திறன்களை கற்க, பன்மொழி அவசியம். உலகில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நுால் திருக்குறள். தமிழில், திருக்குறள் உட்பட பல காவியங்கள் உள்ளன. அவற்றில் அதிக தகவல்கள் உள்ளன. எனவே, மக்கள், அவற்றை படிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை விஞ்ஞானி ஜி.எஸ்.பழனி, முதன்மை விஞ்ஞானி பாரதி பிரியா, மூத்த விஞ்ஞானி டி.ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வெளிநாடுகளிலும்
தமிழ் உணர்வு தான்
குழந்தைகளிடம் தாய்மொழியில் பேச வேண்டும்.சிங்கப்பூர், மலேஷியாவில் வசிக்கும் மக்கள், தமிழில் இனிமையாக பேசுகின்றனர். பொது போக்குவரத்து உட்பட, பொது இடங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதனால், அந்நாடுகளில் இருந்தாலும், தமிழகத்தில்இருப்பது போன்ற உணர்வு தான் தோன்றுகிறது.
நாகப்பன், பொருளாதார நிபுணர்