புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கினார்
புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ.5,000 லஞ்சம்: நகராட்சி பில் கலெக்டர் கையும் களவுமாக சிக்கினார்
ADDED : மார் 08, 2025 07:54 AM

திருநின்றவூர்: ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி பில் கலெக்டர் சண்முகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருநின்றவூர், திருவேங்கடம் நகரைச் சேர்ந்தவர் மாயாண்டி, 65; மின்துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மருமகள் தமிழ்செல்வி. அதே பகுதியில் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதற்கான வீட்டு வரியை செலுத்த, நகராட்சி அலுவலகத்தில், கடந்த ஜன., 25ல் மனு அளித்துள்ளார்.
நகராட்சி பில் கலெக்டர் சண்முகம், 45, முதலில் காலி மனை வரியைச் செலுத்துமாறு கூறியுள்ளார். கடந்த 19ம் தேதி, காலி மனை வரியாக, 18,221 ரூபாய் செலுத்தினார். பின், வீட்டு வரி குறித்து கேட்கும்போது, முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளார்.
கடந்த 5ம் தேதி, மாயாண்டியை தன் அலுவலகத்திற்கு அழைத்த சண்முகம், வீட்டு வரி போடுவதற்கு, 15,000 ரூபாய் லஞ்சம் வேண்டும்; முன்பணமாக உடனே, 5,000 ரூபாயை தரும்படி வற்புறுத்தியுள்ளார்.
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட, ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாயாண்டி நேற்று முன்தினம் புகார் அளித்தார். ஊழல் தடுப்பு பிரிவினர் அறிவுரைப்படி, நேற்று காலை பில் கலெக்டர் சண்முகத்திடம், 5,000 ரூபாயை மாயாண்டி கொடுத்தபோது, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்தான், கடலுார் நெல்லிக்குப்பத்தில் இருந்து சண்முகம், சென்னைக்கு பணி மாறுதல் பெற்று வந்தார்.