நகராட்சி பணி நியமன முறைகேடு வழக்கு சென்னைக்கு மாற்றம் : மணல் குவாரி முறைகேடு வழக்குடன் விசாரிக்க உத்தரவு
நகராட்சி பணி நியமன முறைகேடு வழக்கு சென்னைக்கு மாற்றம் : மணல் குவாரி முறைகேடு வழக்குடன் விசாரிக்க உத்தரவு
ADDED : நவ 27, 2025 09:08 AM

மதுரை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் பணி நியமன தேர்வு நடைமுறையில் முறைகேடு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரிய வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. மதுரை மாவட்டம் மைட்டான்பட்டி ஆதிநாராயணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024---25 மற்றும் 2025--26ல்உதவி, இளநிலை பொறியாளர்கள், நகர் திட்டமிடல் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட 2538 பேரை நியமிக்க நடந்த தேர்வு நடைமுறைகளில் முறைகேடு நடந்துள்ளது.
ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை சில அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நபர்கள் மூலம் லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் நிறுவனத்தில் வங்கி கடன் மோசடி குறித்து விசாரணை நடந்தது. அப்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையில் பணி நியமனம் தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனைக்குரிய ஆவணங்கள் மத்திய அமலாக்கத்துறைக்கு கிடைத்தன. சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் அனுப்பியது. இதனடிப்படையில் தேவைப்பட்டால் தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலரிடம் அனுமதி பெற்று சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுபோல் அமலாக்கத்துறை சார்பில் தாக்கலான மற்றொரு வழக்கு (மணல் குவாரி முறைகேடு தொடர்புடையது) சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அது டிச.8ல் விசாரணைக்கு வருகிறது. அத்துடன் சேர்த்து விசாரிக்க இவ்வழக்கு சென்னைக்கு மாற்றப்படுகிறது. அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து டி.ஜி.பி., அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

